தனிமையில் நான்

குளிர்வாடை முகந்தழுவும்
நெய்தல் கடலோரம்
தனித்திருக்கும் ஓடமாய்
தனிமையில் நான்...

ஓய்ந்திருக்கும் ஆழியலை
ஓயாத உன்நினைவலை
அசைந்தாடும் ஆளில்லாபடகாய்
தத்தளிப்பில் என்னிதயம்...

ஓசையின்றி கள்வனாய்
உள்ளம் வந்தாய்
விழிக்கும்முன் இதயம்
பறித்துச் சென்றாய்...

கரம்கோர்த்து கரையோரம்
காலயர நாம்நடக்க
கவிதைகள் பலசொல்லி
காதலில் திளைக்கவைத்தாய்!

தோளில் தினம்சாய்த்து
மார்பில் தினம்முயங்க
மகிழும் இன்பக்கடல்
நாளும்காணத் தந்தாய்

காலம் கண்ணாமூச்சியாட
கருகொண்டமேகம் கண்ணீர்சிந்த
கருக்கலில் பொருளீட்ட
கடலேறிச் சென்றாய்...

துணைபிரிந்த அன்றிலாய்
தூங்கா விழியோடு
தினமும் காத்திருப்பில்
நாவாயில் நான்..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (23-Jun-21, 11:20 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 1030

மேலே