காதலின் சன்னதி
அனிதாவின் பிறந்த நாள் விழாவில் தான் அவளை சந்திக்க நேர்ந்தது.பெயர் இலக்கியா.இளங்கருப்பு நிறத்தில் உடையணிந்து குளித்த நிலவு போல் இருந்தாள்.முகம் முழுவதும் பிரகாசமாக நொடிக்கொரு தரம் புன்னகை தவழ.
என்னை அனிதா அறிமுகப்படுத்திய போது நான் அவளிடம் "நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க" என்றேன்
அவள் சிரித்து "ரொம்ப தாங்க்ஸ்" என்றாள்
அனிதா என் தோளை கிள்ளி "ரோமியோ கொஞ்சம் ஜொல்லு விடறத நிறுத்து. அவ ஆல்ரெடி கமிட்டட்"
மனதில் நிலநடுக்கம்.அனிதா சொல்வதை நம்புவதற்கு சிரமமாகவும், கசப்பாகவும் இருந்தது.மனதை தேற்றிக் கொண்டு அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
நண்பர்கள் சூழ்ந்து அனிதாவின் முகத்தில் கேக்கை அலங்கரிக்க, நான் தயங்கி ஒரு ஓரமாக விலக அவள் என்னருகே நிற்பது தெரியாமல் உரசிவிட்டேன்
அவள் தயக்கமுற்று ஏதோ பதட்டமாக இருந்தாள்
"என்ன ஆச்சு" என்றேன்
நண்பர்களின் குதுகலத்தில் அவள் குரல் காதில் விழவில்லை
அனிதா என் வாய்க்குள் கேக்கை திணித்து, இலக்கியாவை அருகே அழைத்து, அவளுக்கும் ஊட்டி விட்டாள். நாங்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டோம்
அன்றிரவு மழை பெய்தபடி இருந்தது.நண்பர்கள் ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கினர்.நானும் கிளம்ப முற்பட்டேன்.
"டேய் கார்த்திக், போற வழியில இலக்கியாவ கொஞ்சம் ட்ராப் பண்றியா. என் வண்டியில பெட்ரோல் காலியாயிடுச்சு"
"அனி நானே முப்பது ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு ஓட்டிட்டு இருக்கேன். வழியில வண்டி நின்னா என்ன செய்யறது"
"ரொம்ப சீன் போடாதடா. பாவம், எனக்காக வீட்ல பொய் சொல்லிட்டு வந்திருக்கா. ப்ளீஸ் கொஞ்சம் ட்ராப் பண்ணிடு. இலக்கியா நீ போ"
அவள் அமர்ந்ததும் வண்டியை கிளம்பினேன்.இரவின் ஈரமான காற்று நிலவின் குளிர்ந்த ஒளியின் கலவையோடு முகத்தில் அறைந்தது.
"எங்க போனோம்"
"சாந்தி காலணி"
"நீங்க அனிதாவோட கிளாஸ்மேட்டா"
"ஆமாம். யூ ஜி வரைக்கும். நீங்க என்ன பண்றீங்க"
"சிவில் முடிச்சிட்டு ஆர்க்கிடேக்கா ஒர்க் பண்றேன்"
"கொஞ்சம் தயங்கி நீங்க கமிட்டட்னு அனிதா சொன்னா அது நிஜமா"
"இல்லை"
கொஞ்சம் இலகுவான மனதை உடைப்பது போல
"ஐம் மேரிட்"
நான் சடக்கென்று ப்ரேக்கை அழுத்தி விட்டேன்
-----
கடற்கரையில் நாங்கள் அமர்ந்து கொண்டிருந்தோம்.இலக்கியா மௌனமாக இருந்தாள்.
"என்ன இலக்கியா ஏன் சோகமா இருக்க"
"தெரியில கார்த்திக் அனிஷ் ரொம்ப டார்ச்சர் பண்றான். எப்ப பாரு என்ன சந்தேகப்படறான். ரோட்ல ஒருத்தர் கூட நின்னு பேசக்கூடாதுனு மிரட்றான். மீறுனா கெட்ட வார்த்தை சொல்லி நாளு பேரு முன்னாடி அசிங்க அசிங்கமா திட்றான். ரோட்ல நடமாட முடியல"அழுதாள்
"இலக்கியா அழாத. நான் வேணா உன் வீட்டுக்கு வந்து பேசவா"
"வேணா கார்த்திக். என் சோகம் என்னோட"
நாங்கள் எழுந்து நடந்தோம். ஈரமணலில் பாதங்கள் ஒட்டிக் கொண்டு எங்கள் பாதையை பின்தொடர்ந்தன.
அவளை பேருந்தில் அனுப்பி விட்டு பைக்கை கிளம்பினேன்.மனம் பாரமாக இருந்தது.
_____
அனிஷ் வாசலிலே அமர்ந்திருந்தான்.மடியில் குழந்தை பிரகதி.
"ஏய் ...டியா குழந்தைய கூட பாத்துக்காம எங்க போய் மேஞ்சுட்டு வரடி"
"இதப் பாருங்க வார்த்தைய அளந்து பேசுங்க. நான் ஒன்னும் ஊர் மேய போல"
அவள் குழந்தையை அவன் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டாள்
"என்னடி எங்க போயிட்டு வர்றனு கேட்டா நக்கலா பதில் சொல்ற"
"ஆமா.நீங்க மனசுல எதை எதையோ கற்பனை பண்ணிட்டு கேள்வி கேட்டா அப்படி தான் பதில் சொல்லுவேன். குழந்தைக்கு செரிலாக் வாங்கி கொடுக்க துப்பில்ல பேசறத பாரு"
அவள் கன்னம் சிவக்க அறைந்தவன் கால்களால் அவளை எட்டி உதைத்தான்
"சாவுடி சனியனே உன்ன போய் கல்யாணம் பண்ணி தொலைச்சேன் பாரு. சாவு"
குழந்தை பீறிட்டு அழறியது. அவள் அடிவயிற்றில் சொல்ல முடியாத வலி
_____
அனிதாவின் மிஸ்டு காலை பார்த்து அவளுக்கு கால் செய்தேன்
"ஆ.. கார்த்திக் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
"ஏய் லூசு பேசிட்டு தான இருக்க. விஷயத்த சொல்லு"
"ஒரு முக்கியமான விஷயம் டா. நீ ஃப்ரீயா"
"ஃப்ரீ தான் சொல்லு"
"நம்ம இலக்கியாவோட அஸ்பண்ட் ஒரு ரோட் ஆக்ஸிடேன்ட்ல இறந்துட்டாராம்.
இப்ப தான் போன் வந்தது"
மனதில் பதட்டமும், பரிதாபமும் படர்ந்தது. "சரி நான் வரேன்" உடனே பைக்கை கிளம்பினேன்
_____
இலக்கியா முகத்தில் நான் எதிர்பார்த்ததுக்கு மாறாக கண்ணீரே இல்லை.அவள் மாமியார் அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள்.குழந்தை பிரகதி அவள் மார்பை தீண்டி தீண்டி அழுதது.
நானும் அனிதாவும் அவளருகே சென்று ஆறுதலாக நின்றோம்.
அனிதா எதையோ கேட்க அவள் சன்னமான குரலில் பதில் தந்தாள்.நான் குழந்தையை எடுத்துக் கொண்டு அருகேயிருந்த கடைப்பக்கம் சென்றேன்.
குழந்தை மெலிந்த தேகத்தோடு அவளின் சாயலில் இருந்தது.அணிந்திருந்த கவுனை கைகளில் எடுத்து வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்தது.நான் டீக்கடைக்கு சென்று ஒரு டம்ளர் பாலை வாங்கி அதற்கு ஊட்டினேன்.மெல்லிய கரங்கள் கொண்டு என்னை வருடிய படியே பாலை பாதி குடித்து பின் அழத் தொடங்கியது.நான் சமாதானம் என்ற பெயரில் எதை எதையோ வேடிக்கை செய்தேன்.ஆனால் குழந்தை அடங்கிய பாடில்லை.
நான் திரும்பி வரும் போது அங்கே ஒரே பதட்டம்.நான் அருகே நெருங்கிச் சென்றேன்.அனிஷின் சகோதரன் முகத்தில் குரோதத்தோடு இலக்கியா விடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்
அவன் வார்த்தை அவ்வப்போது ஆபாசமாக உரத்தெழுந்தது.
இலக்கியா நிதானமாக இருந்தாள்.அவள் அவன் வார்த்தைகளை காதில் வாங்கவே இல்லை
மூச்சுக்கு மூச்சு அவன் அண்ணண் இறந்ததற்கு அவள் தான் காரணம் எனவும் அவளால் தான் தன் குடும்பம் பிரிந்தது எனவும் கூறி சத்தமிட்டு கொண்டிருந்தான்.
அவனின் நண்பர்கள் இருவர் வந்து அவனை அமர்த்தி அழைத்துச் சென்றனர்.இலக்கியாவிடம் குழந்தையை தருவதா? வேண்டாமா? என்ற தயக்கத்தோடு நான் நின்றுக் கொண்டிருந்தேன்.குழந்தை அழுகையை நிறுத்தி இருந்தது.அனிதா என்னை அழைத்து" உன்கிட்ட பணம் எதாவது இருக்கா" கேட்க
"ஏடிஎம் ல தான் எடுக்கணும் அனி"
"சரி போய் எடுத்துட்டு வரீயா. கொஞ்சம் சீக்கிரம்"
நான் விரைந்தேன்
அனிஷின் பாடியை அருகிலிருந்த எரிமேடையில் எரித்து அவன் சாம்பலை பெற்றுக் கொண்டு வந்தோம்.குழந்தை வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது.இலக்கியா உள்ளே அழுதுகொண்டு இருந்தாள்.அனிதா அவளை சமாதானப்படுத்தி கொண்டிருந்தாள்.
"நான் போய் சாப்பாட்டுக்கு அரேஞ்ச் பண்றேன்* நான் விடைபெற முனைய அனிதா என்னிடம்
"இந்தா" இரண்டு வளையலை என்னிடம் கொடுத்து
"இத அடமானம் வச்சிடு"
"எதுக்கு"
"நீ பண்ண செலவுக்கு. கடனா கூட மத்தவங்க பணம் வேண்டாம்னு இலக்கியா சொல்றா"
"நான் ஒன்னும் மத்தவன் இல்லனு அவகிட்ட சொல்லு"
திடுக்கிட்டு அவள் விழித்தாள். நான் நிற்காமல் கிளம்ப
என்னை பின்தொடர்ந்து வந்த அனிதா
"டேய் என்னடா சொல்ல வர்ற"
"நான் இலக்கியாவ கல்யாணம் பண்ணிகிலாம்னு இருக்கேன் அனி"
"டேய் லூசு மாதிரி உளறாத. அவ புருஷன எரிச்சி ஒரு மணி நேரம் ஆகல அதுக்குள்ள கல்யாணம்னு பேசற"
நான் அமைதியா இருக்க அவள் தொடர்ந்தாள்
"நான் ஒத்துக்கறேன். உனக்கு அவ மேல அளவுக்கு அதிகமா அபெக்க்ஷன் இருக்கு தான் அதுக்காக அவ நிலைமைய உனக்கு சாதகமா ஆக்கிக்க ட்ரை பண்ணாத"
"நா ஒன்னும் அவள கட்டாய பண்ணி கல்யாணம் பண்ணப்போறாதா சொல்லலையே அனி"
"நீ பேசறது கேட்க நல்லாருக்கு கார்த்திக். ஆனா மத்தவங்க அவள என்ன நினைப்பாங்கனு கொஞ்சம் யோசிச்சு பாரு"
"அனி மத்தவங்க மத்தவங்கனு பேசி பேசி எப்ப தான் நாம நம்மோட வாழ்க்கைய வாழப் போறோம். மிஞ்சி போனா ஒரு வாரம் ஆறுதலா அவள கவனிச்சுப்பாங்க. அதுக்கப்பறம். அவளும் குழந்தையும் என்ன பண்ணுவாங்க? கொஞ்சம் யோசி"
"அதுக்கு அவள நீ கல்யாணம் பண்ணிக்கறது தான் ஒரே தீர்வா"
நான் மௌனமாக இருந்தேன்
"உனக்கு முன்னாடியே அவ எனக்கு ப்ரண்ட் கார்த்திக். நான் அவள பார்த்துக்க மாட்டேன்னு நினைக்கறியா. அவ லைஃப் இப்படி ஆனதுல எனக்கும் வருத்தம் தான்.ஆனா அதுக்காக நாம கவலப்பட்டுட்டே இருக்க முடியுமா.அவளுக்கு நாம தான் தைரியம் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா மீட்டுட்டு வரணும்.அந்த தைரியத்த ஒரு சக தோழானாலும் சொல்ல முடியும் தானே"
நான் சிந்திக்க ஆரம்பித்தேன்.அனிதா சொல்வது சரிதான்.நான் இந்த இறப்புக்கு வரும் முன்வரை இந்த எண்ணம் எனக்கில்லை.அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது.ஆனால் அவளின் எதிர்காலத்தை நினைத்து என் மூளை மழுங்கி இப்படி உளறியதோ.மரணம் என்பது அனைவருக்கும் எப்போதோ வரப்போவது தான்.அதை கடந்து வாழ்வதும் அதிலிருந்து மீண்டு வருவதும் தான் வாழ்க்கை.
நான் அடகு வைத்த பணத்தை அவள் கையில் கொடுத்தேன்.உங்க செலவு போக மிச்சத்தை தரும்படி சொன்னாள்.
நான் குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.அனிதாவும் என்னோடு விடை பெற்றாள்.
-----
அதன் பின் மூன்று ஆண்டுகள் நான் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தேன்.இதற்கிடையில் அனிதாவின் திருமணமும் முடிந்திருந்தது.
ஏனோ ஒருநாள் அனிதாவை காண வேண்டும் என அவள் வீட்டுக்கு சென்றேன்.அவள் கணவனுடன் வெளியூர் சென்றிருப்பதாக சொன்னார்கள்.பின் இலக்கியா வீட்டுக்கு செல்ல முடிவெடுத்து கிளம்பினேன்.அவள் இருந்த வீடு இடிக்கப்பட்டு பிளாட் கட்டிக் கொண்டிருந்தார்கள்.விசாரித்ததில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே அந்த வீட்டை விற்று விட்டதாக கூறினார்கள்.அவர்கள் யாருக்கும் இலக்கியாவை பற்றி தெரியவில்லை.
சரி என்று கிளம்பி வரும் வழியில் தான் காண நேர்ந்தது.ஒரு கோவிலை ஒட்டிய படிக்கட்டில் கிழிந்த உடை உடுத்தி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது ஒரு குழந்தை.கிட்டத்தட்ட இலக்கியாவின் மகள் சாயலில்.அருகே நெருங்கி பார்த்தேன்.அவள் குழந்தை தான்.மூக்கு ஒழுக வாயில் விரல் வைத்துக்கொண்டு என்னிடம் அலுமினியத்தட்டை நீட்டி நீட்டி சிரித்தது.துக்கம் மேலெழ அக்குழந்தையை அணைத்துக் கொண்டேன்.அதனிடம்
"அம்மா எங்க?" என்றேன்
அது "அ..ம்மா..அமா" என்றவாறு கோவிலை ஒட்டிய ஒரு அரசமரத்தடிக்கு என்னை அழைத்துச் சென்றது.
அங்கு ஒரு பைத்தியக்காரி தோரணையில் ஒரு பெண்.மனம் அதிர அருகில் சென்றேன்.முற்றிலும் விகாரமான ஒரு தோற்றத்தில் இலக்கியா.ஏதோ பிரமை பிடித்தது போல இருந்தாள்.
என்னை கண்டதும் "கொல்லு கொல்லு" என அரற்றினாள்
நான் ஒரு கணம் பதறினேன்.பின் அங்கிருந்து விலகும் வரை அவள் அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் ஏன் அப்படி ஆனால்?
அவளை நான் அப்படியே விட்டுவிடுவது சரிதானா?
அந்த குழந்தையின் எதிர்காலம் என்ன?
அப்போது ஒரு பெரியவர் வந்து என்னிடம்
"தம்பி அந்த பைத்தியத்துகிட்ட எதுக்கு போறீங்க. அது யார பார்த்தாலும் இப்படி தான். நான் கூட ஒருமுறை இரக்கப்பட்டு சாப்பாடு கொடுக்க போனேன். ஆனா சாப்பாட வாங்காம இப்படி கத்தி ஊரை கூட்டிடுச்சி. அதுக்கப்பறம் அந்த லூசு இருக்கற பக்கமே போறதில்ல"
எனக்கு கோபமும் பரிதாபமும் எழுந்தது.
அனிதாவிற்கு கால் செய்தேன்.
நீண்ட நேரத்திற்கு பின் காலை அட்டென்ட் செய்தவள்
குரல் கம்ம "என்ன மன்னிச்சிடு கார்த்திக். நீ என் வீட்டுக்கு வந்த விஷயத்த இப்பதான் கேள்விப்பட்டேன். நான் இப்ப வெளியூர்ல இருக்கன் டா.உன்கிட்ட இவ்வளவு நாளா ஒரு விஷயத்த சொல்லாம மறைச்சிட்டேன்.சொல்லக்கூடாதுனு இல்ல ஆனா சொன்னா நீ போனகாரியம் கெட்டு உன் லைஃப் ஸ்பாயில் ஆயிடும்னு நினைச்சு தான்"
அழுகையை நிறுத்தி தொடர்ந்தாள் "நீ போன ஒரு மாசத்துல இலக்கியா வீட்ல பெரிய சண்டை ஆயிடுச்சு.அனிஷோட தம்பி இலக்கியாவ கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கான்.ஒருநாள் கோபத்துல இலக்கியா அவன ரோட்ல வச்சி கன்னத்தில அடிச்சிட்டா அவனும் பதிலுக்கு கண்ணு மண்ணு தெரியாம அடிக்க அவளுக்கு மண்டைல பலமா அடிப்பட்டு இருக்கு.அதுக்கப்பறம் அவ சுய நினைவே இல்லாம யாரோ மாதிரி இருந்தா.நான் எனக்கு தெரிஞ்ச ஹோம்ல அவள சேத்துவிட்டேன்.அங்கேயும் பிரச்சினை பண்ணி எப்படியோ தப்பிச்சு போயிட்டாளாம்.அவளுக்கு அவ குழந்த மட்டும் தான் நினைப்புல இருக்கு.அதுக்கிட்ட மட்டும் தான் அமைதியா இருப்பா.மத்த யாரப்பார்த்தாலும் கத்திட்டே இருப்பா.உன்கிட்ட இப்ப ஒரு உண்மைய சொல்லுறேன் கார்த்திக்.அவ மனசுல ஒரு மூலையில உன்ன கட்டிக்கணும்னு ஆசை இருந்திருக்கு.ஆனா மத்தவங்க என்ன நினைப்பாங்கனு அத சொல்லாமலே மறைச்சிட்டா.நீ ஊருக்கு போனத சொன்னப்ப ரொம்ப சோகமாயிட்டா.அப்ப தான் நானே அதை கண்டுபிடிச்சேன். நீ அன்னிக்கு அவள கல்யாணம் பண்ணிக்கப்போறனு சொன்னப்ப நான் செஞ்சது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு இப்ப தான் தோணுது கார்த்திக்" அவள் அழுகை வெடித்தது
எனக்கு மொபைலை தூக்கி எறிய வேண்டும் போல இருந்தது.குழந்தை பிரகதி என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தது.பின் என்ன நினைத்ததென்று தெரியவில்லை என் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து "அழக்கூடாது அழக்கூடாது" என ஆறுதல் சொல்லத் தொடங்கியது.நான் அதை கட்டியணைத்து கொண்டேன்.என் கண்ணீர் வழிந்து அதன் தோள்மீது விழுந்தது.
நான் இலக்கியாவை என்னுடன் வருமாறு எத்தனையோ முறை அழைத்தேன்.அவள் விடாப்பிடியாக அப்படியே இருந்தாள்.பின் நான் பிரகதியை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு செல்ல நினைத்தேன்.
இனி அவள் என் மகள் தான்.இந்த சமூகத்தை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.நான் என் விருப்பப்படி வாழப் போகிறேன்.நாங்கள் கிளம்பும் போது இலக்கியாவை நோக்கினேன்.அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்.குழந்தை அம்மா என்றபடி அவளை நோக்கி கைக்காட்டியது
நான் "அம்மாக்கு சாப்பாடு கொண்டு வரலாம்" என்று அதை சமாதானப்படுத்தி னேன்.குழந்தை கைத்தட்டி புன்னகைத்தது.
அனுதினமும் நானும் பிரகதியும் இனி இந்த கோவிலுக்கு வரத்தான் போகிறோம். கடவுளுக்காக அல்ல, எங்கள் இலக்கியாவுக்காக...