உரிமை

ஏழைகளோ? வாழ்வில் உயர்ந்தால் - நெஞ்சில்
புகைமூட்டம் தோன்றுவதேனோ?...
கோழைகளோ? காலில் விழுந்தால் - நெஞ்சம்
நெருப்பாற்றில் நீந்துவதேனோ?...

சிலருக்கோ? சுயநல உரிமை - இன்னும்
சிலருக்கோ? விடுதலை உரிமை
வேண்டுவது கிடைத்திடுமோ? - வர
வேண்டியது தடைபடுமோ?...

எதுவுமிங்கே நிரந்தரமில்லை - அது
எவருக்குமே புரிவதுமில்லை...
எங்கோ? இருக்கும் உரிமை - அதில்
எங்கும் இருப்பதோ? வெறுமை...

அரசாங்க வாசலென்ன - பெரும்
சுற்றுலாத் தலங்களோ?
அடித்தட்டு மக்களெல்லாம் - தினம்
சுற்றி சுற்றிப் பார்க்குதே...

அதிகாரி என்றாலிங்கு - வரம்
தருகிற கடவுளோ?
பணம்தந்து உரிமையைக் - கண்கள்
கெஞ்சி கெஞ்சிக் கேட்குதே...

விடுதலை அடைந்து விட்டோம் - என்று
வெறும்வாயில் கதைத்தாலும்
அடிமையெனத் தெரியாமல் - மக்கள்
வாழும்கதை அதிகம் இருக்குதே...

உயர்வினை அடைவதற்கு - மொத்த
உடல்தேய உழைத்தாலும்
நரிகளைப்போல் முதலாளி - செய்யும்
சூழ்ச்சிகளில் சுரண்டல் நடக்குதே...

சுற்றுச்சூழல் கெட்டப்பின்னே - இங்குச்
சுத்தக்காற்று வீசிடுமோ?
எங்கோ? இருக்கும் உரிமை - அதில்
எங்கும் இருப்பதோ? வெறுமை...

அதிகாரம் இல்லையெனச் - சாலை
மறியலை நடத்துவோர்
அவர்வீட்டுப் பெண்களுக்கும் - உள்ள
அங்கீகாரம் மறுப்பதேன்...

விதிமீறும் ஏழைகளை - ஒரு
கைதியாய் நடத்துவோர்
பணக்காரன் குற்றம்செய்தால் - அதை
மூடி மூடி மறைப்பதேன்...

தலைமுறை கடந்துவந்தும் - இந்த
மதம்சாதி தினம்மோதும்
சண்டைகளோ? முடியாமல் - தெய்வம்
வாழும்இடம் இருண்டு கிடக்குதே...

விடியலைத் தொலைத்துவிட்டுப் - புது
இருட்டுக்குள் வழிதேட
உரிமைதரும் ஒருநாட்டில் - மக்கள்
வாழ்வைப்புதைக் குழிகள் இழுக்குதே...

கண்கள்சூடும் கண்ணாடிகளால் - உண்மை
காட்சியெல்லாம் மாறிடுமோ?
எங்கோ? இருக்கும் உரிமை - அதில்
எங்கும் இருப்பதோ? வெறுமை...

0உ/0எ/உ0ருஉ

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (27-Aug-21, 11:18 am)
பார்வை : 1662

மேலே