கொசுக்களின் போராட்டம்

கொசுக்களின் போராட்டம் (சிறுகதை):

நியாயம் கேட்டு கொசுக்கள் எல்லாம் ஒன்றுகூடி..,நீதிமன்றவளாகத்தில்
தர்ணா போராட்டம் செய்தது .

காவல்துறை எவ்வளவு முயற்சி செய்தும், கொசுக்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மறுத்து விட்டன ..

காவல்துறையினர் இது குறித்து நீதிபதியிடம் முறையிட்டார்கள். நீதிபதியும் கொசுக்களின் தலைவனை உள்ளே கூட்டி வாருங்கள் ..
அவர்களின் பிரச்னை என்னவென்று கேட்போம் என்றார் ..

கொசுக்களின் தலைவன் உள்ளே வந்தவுடன், உங்கள் கோரிக்கை என்னவென்று ..நீதிபதி கேட்டார் ..

ஐயா ..நாங்கள் மனிதர்களை கடித்து ரத்தம் குடிப்பதால் , எங்களை அடித்து துன்புறுத்தி ..சில சமயங்களில் கொன்று விடுகிறார்கள் ..
அதில் நியாயம் இருப்பதால் ..நாங்களும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறோம் ..என்று கொசுக்களின் தலைவன் சொன்னான் ..

அது சரி ..இப்போ என்ன பிரச்சனை ..என்றார் நீதிபதி

ஐயா ..மக்கள் முன்னால் நாங்கள் பறந்து சென்றாலே ..மக்கள் எங்களை துரத்தி வந்து, அடித்து துன்புறுத்தி, சில சமயங்களில் கொலையும் செய்து விடுகிறார்கள் ..எனவே ..கணம் நீதிபதி அவர்களே நாங்கள் செய்யாத குற்றத்திற்கு ..மக்கள் எங்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம் ..எனவே ..தாங்கள் எங்கள் பக்கத்துக்கு நியாயத்தை ஏற்றுக்கொண்டு ..மக்களுக்கு ..இந்த நீதிமன்றம் தக்க தண்டனை வழங்க வேண்டுமென்று மிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ..

இதனை கேட்டவுடன் ..நீதிபதி சற்று ஆடிப்போய் விட்டார் ..என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தார் ..கொசுக்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதையும் உணர்ந்தார் .

சரி ..கொசுக்களின் தலைவனே ..தங்களின் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன் ..இது பற்றி, மக்கள் தரப்பின் வாதத்தையும் விசாரித்துவிட்டு ..நாளை தீர்ப்பு சொல்கிறேன் என்றார் .

மக்களிடம் இதுபற்றி நீதிபதி விசாரித்தார் ...

அதற்கு மக்களின் வாதம் ...

ஐயா நாங்கள் கொசுக்களை வேண்டுமென்று, அடித்து துன்புறுவதில்லை ..அது எங்கள் முன்னால் பறந்து செல்வதால், எங்கே எங்களை கடித்து..ரத்தத்தை குடித்து விடுமோ என்ற அச்சத்தில்தான் ..அதனிடம் இருந்து எங்களை தற்காத்துக் கொள்வதற்கு முயலும் போது..அதன் மீது அடிபட்டு விடுகிறது கணம் நீதிபதி அவர்களே ..மற்றபடி கொசுக்களை துன்புறுத்த வேண்டும் என்பது எங்களின் எண்ணம் கிடையாது என்று ..மக்கள் தங்களின் தரப்பு நியாயங்களை முன் வைத்தார்கள் ..

மறுநாள் ,,நீதிமன்றம் கூடியது ..நீதிபதியின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று அறிவதற்கு எல்லோரும் ஆர்வத்துடன் இருந்தார்கள்.

இருதரப்பு வாதங்களையும் இந்த நீதிமன்றம் மிக்க கவனத்தில் எடுத்துக்கொண்டது ..

கொசுக்களே ..நீங்கள் உங்களின் எல்லையை தாண்டி மக்கள் முன்னால் பறந்து செல்வதால் ..மக்கள் உங்கள் மீது அச்சம் கொண்டு,
உங்களின் தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்வதற்கு தற்காப்பு நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் ..மற்றபடி உங்களை அடிக்க வேண்டும் என்பதோ அல்லது அழிக்க வேண்டும் என்பதோ மக்களின் எண்ணம் இல்லை ..

எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதோடு ...கொசுக்களிடம் இருந்து மக்களையும் ,,,மக்களிடம் இருந்து கொசுக்களையும் பாதுகாக்க வேண்டியது "சுகாதார துறையின் தார்மீக கடமை" என்பதை தெரிவித்து ..சுகாதாரத்துறையினர் மருந்து தெளித்து கொசுக்களை விரட்டும்படி ஆணை பிறப்பிக்கிறேன் என்று சொன்னார் .
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Sep-21, 9:27 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 221

மேலே