சிறந்த அறக்களி இல்லாதார்க் கீயுமுன் தோன்றும் – நான்மணிக்கடிகை 35

இன்னிசை வெண்பா

மறக்களி மன்னர்முன் தோன்றுஞ் சிறந்த
அறக்களி இல்லாதார்க் கீயுமுன் தோன்றும்
வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாங் கயக்களி
ஊரில் பிளிற்றி விடும். 35

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

வீரக் களிப்பு அரசர்கட்கு முன்னால் வீரர்கட்கு உண்டாகும்; மிக்க ஈகைக் களிப்பு வறியவர்கட்கு ஒன்று கொடுக்கு மிடத்து கொடுப்பார்க்கு உண்டாகும்; யாதானும் ஒன்றைப் பெற்று வியத்தல் செய்யுங் களிப்பு வறிஞர்கள் பாலுண்டாகும், கீழ்மை இயல்பால் உண்டாகும் களிப்பு இருக்கும் ஊரில் பலரும் அறிய ஆரவாரித்தலால் உண்டாகும்.

கருத்து:

அரசனுக்கு முன்னாற் பொரும்போழ்து வீரர்கட்கு வீரக்களிப் புண்டாகும்;

வறியார்க்கு ஒன்றீவதே செல்வர்கட்கு உண்மையான ஈகைக் களிப்பாம்;

ஒன்றைப் பெற்று வியக்கும் களிப்பு ஏழைகட்குண்டு;

கீழ்மகனது கீழ்மையாலான களிப்பு ஊரெல்லாந் தெரிவித்து ஆரவாரஞ் செய்தலே யாகும்.

விளக்கவுரை:

அறம். உயர்வினால் ஈகைமேனின்றது. நல்கூர்ந்தார் மேற்று; மேல் - ஏழனுருபு. கயவு - இங்குக் கீழ்மை.

பிளிற்றிவிடும் - இரைச்சலிட்டுவிடும்;

கீழ்மகன் தனது புன்செயலைப் பெரியதாய்க் கருதி ஊரெங்கும் சொல்லிச்சொல்லி மகிழ்தலே, ‘கீழ்மைக் களிப்' பெனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Sep-21, 9:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே