லொக் டவுணில் ஒரு கலியாணம் - இறுதிப் பகுதி 11

11.

கலியாண நாளும் வந்தது. மாப்பிள்ளை அழைப்பு, பொம்பளை அழைப்பு என ஆடம்பரம் எதுவும் இல்லாமல் அடக்கமாக ஆதியின் வீட்டிலேயே நடக்க ஏற்பாடாகியிருந்தது. குறித்த நேரத்தில் ஐயர் தனது பூஜை வேலைகளை ஆரம்பித்திருந்தார். அனைவர் மனதிலும் இனம் புரியா சந்தோசம் பரவியிருந்தது. இந்த லொக்டவுண் நேரத்தில் ஒரு கலியாணத்தை செய்து முடிப்பது என்பது பத்து வீட்டை கட்டி முடிப்பதுக்கு சமானம் என்றால் மிகையில்லை தான்.

அந்த சந்தோசமும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சற்று நேரத்தில் அனைவரது முகத்திலும் கலவரத்துடன் கூடிய சங்கடமான நிலை பரவியது. யாருக்கும் அழைப்பு கொடுத்திரா நிலையில் அக்கம்பக்கத்தில் இருக்கும் ஒருசிலர் கலியாணத்துக்கு வருகை தந்திருந்தனர். வந்தவர்களை முகத்தில் அடித்தால் போல் திருப்பி அனுப்பமுடியாது. அவர்களாக உணர வேண்டியது. ஆனால், அவர்களில் எந்த கலவரமும் இன்றி கலகலப்புடன் கதைகள் பேசிக்கொண்டு இருந்தனர்.

"ஐயரே... கொஞ்சம் சீக்கிரம் பண்ணுங்கோ... தாலி கட்ட முதல் பொலீஸ் வந்திட்டால் பிரச்சனையாகிடும்..." நடராசா கெதிப்படுத்தினார்.

சினிமா படங்களில் கதாநாயகன் தாலி கட்டும் கடைசி நிமிடத்தில் வந்து நிற்பது போல் தாலி கட்ட பதினைந்து நிமிடங்கள் இருக்க சுகாதார பிரிவின் வாகனம் வந்து நின்றது.

ஆதி-தமிழிசை முகத்தில் பயத்துடன் கூடிய கலவரம். வந்திருந்த சனத்தை மனதுக்குள் திட்டிக் கொண்டான்.

"ஐயரே... நீங்கள் நிற்பாட்ட வேண்டாம். நான் போய் என்ன ஏது என்று விசாரிச்சிட்டு வாறன் " என்றவாறு நடராசா வாசலடிக்கு சென்றார்.

இதற்கிடையில் வந்திருந்தவர்கள் மெதுவாக வெளியே செல்ல முற்படவும் அவர்கள் அனைவரையும் உள்ளேயே விட்டு வெளியேறாதவாறு மறித்துக் கொண்டார்கள்.

"என்ன சேர்... பதினைஞ்சு பேர் என்று சொல்லிட்டு இங்கே என்னவென்றால் நாற்பது, ஐம்பது பேர் இருக்கினம்... நீங்களே இப்பிடி செய்யலாமா சேர்..." வந்திருந்த அதிகாரி கேட்டார்.

"உண்மை தான் தம்பி... இவங்க யாரையும் நாங்க வரச் சொல்லி சொல்லவில்லை. அவங்களாக வந்திட்டாங்கள். எப்பிடி திருப்பி அனுப்புறது என்று சொல்லுங்கோ... என்கிட்ட ஏதோவிதத்தில் கடமைபட்டவங்களா இருப்பாங்கள். நன்றிகடனுக்காக வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்..." - நடராசா

"இருந்திட்டு போகட்டும் சேர்... ஆனால், பதினைஞ்சு பேருக்கு மேலே நின்றால் நாங்கள் எங்கட கடமையை செய்யத் தான் வேண்டியிருக்கும்..."


என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் நிற்க

"இங்க நிற்கிற எல்லோருடைய விபரங்களையும் எழுதி எடுங்கோ..." தனது உதவியாளர்களுக்கு கட்டளையிட்டார்.

"இதுக்கு வேறு வழி இல்லையா தம்பி..." - நடராசா

"சேர்... இப்போ நாங்க வந்திட்டு விட்டுட்டு போனால் நாளைக்கு எங்களுக்கு தான் பிரச்சனை... ஒன்றும் செய்யமுடியாது சேர்... தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியே தான் ஆகவேண்டி இருக்கும்..."


"சரி தம்பி... எனக்கு ஒரு பத்து நிமிசம் கொடுங்கோ... தாலி கட்டுற நேரமாச்சு... மேடை வரைக்கும் வந்திட்டு நின்றால் நல்லதில்லை... இது தவறினால் இப்போதைக்கு வேற முகூர்த்தமும் இல்லை..." - நடராசா

சிறிது நேரம் யோசித்த அதிகாரி
"சரி... சீக்கிரம் முடியுங்கோ... நாங்கள் போகோனும்..."

உள்ளே சென்ற நடராசா நிலைமையை விளக்கி சொல்லி தாலி கட்டுவதை விரைவுபடுத்தினார்.

தாலி கட்டிய பிறகு பொம்பளையை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்து அங்கே தனிமைப்படுத்த உத்தரவிட்ட அதிகாரி ஐயர், கமெரா பொடியள், உட்பட கலியாணவீட்டுக்கு வந்தவர்களின் வீட்டு கேற்றில் தனிமைப்படுத்தியதற்கான அறிவித்தலை ஒட்டுவித்தார்.

"என்னப்பா இது.... தாலி கட்டியாச்சு தானே.... தமிழிசை இங்கேயே நிற்கலாம் தானே.... ஏன் அவங்க வீட்டுக்கு அனுப்புவான்... கேளுங்கோ ப்பா..." - ஆதி

"தாலி கட்டு முடிஞ்சு தானே தம்பி. மருமகளை இங்கே இருக்கலாம் தானே..." - நடராசா

"இல்லை சேர்... அப்பிடி அனுமதிக்க முடியாது. இரண்டு கிழமை தனிமைப்படுத்தல் அல்லது பி.சி.ஆர். செய்த பின்னர் தான் எதுவானாலும்... " வீட்டை தனிமைப்படுத்திவிட்டு வெளியேறினார்.

எப்பிடியோ கல்யாணம் முடிஞ்சு தானே என்ற பெருமூச்சோடு ஆறுதலடைந்தனர்.

- கொரோனா ஒழிக

எழுதியவர் : பெல்ழி (24-Sep-21, 4:11 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 521

மேலே