நிரந்தரம் இல்லாத உலகில்

கவிதை எழுதுகிறேன்..
பேனா மையால் குளிக்க
வேண்டிய காகிதம்
கண்ணீர் துளிகளால் நனைந்து விட்டது..
மனிதா!!
மடமையில் முடங்கிய உன்னை நினைத்து கவி வடிக்கிறேன்
கவி முற்றுப் பெறுமா?
காகிதம் கரைந்து விடுமா?

நிரந்தரமே இல்லாத உலகில்
கோபமும் பகையும் மட்டும்
எப்படி நிரந்தரமானது!!

இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட உலகமே!
ஒருநாள் அழியும் போது..
மானிடர்களால் உருவாக்கப்பட்ட
பகை மட்டும் அழிந்து போகாதா?
மனிதா ஏன் இந்தக் கோரப்பிடி?

கண் முன்னே சொந்த உறவுகள்
உயிர் விட்டுப் போவதை கண்டும்
உன் மனம் மாறவில்லையே..

இதயம் ஒரு சதை பிண்டமா?
இல்லை இரும்பால் உருக்கப்பட்டதா?

தினம் நிற்க நேரமின்றி ஓடும் நாம்,
ஒரு நிமிடம் நின்று
நம் வாழ்வை திரும்பிப் பார்த்தால் புரியும்
எல்லாம் நிலையற்றது என்று

விடை தெரியாத கேள்விகளும்
காயப்பட்ட அனுபவங்களும்
நிறைந்ததே இந்த வையகம்
பிறகு ஏன் இந்த
கோபத்தாலும் பகையாலும்
உன்னையே நீ தொலைக்கிறாய்?

அன்பை நிரப்புவோம்..
கோபத்தை களைப்போம்..
இன்று நானாjQuery17105231626058732421_1633446578370
நாளை நீயா??
என்று, எண்ண கூட முடியாத
காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

நிலையற்ற இவ்வாழ்க்கையில்
நிலையான அன்பை மட்டும்
நிலைபெறச் செய்தால்
நாளை போகும் எம் உயிரிற்காக
இறைவனிடம் கண்ணீரோடு கையேந்த
ஒரு உறவாவது கிட்டும்..

எழுதியவர் : இளம் சிற்பி (3-Oct-21, 11:04 pm)
சேர்த்தது : Ihsana Imthiyas
பார்வை : 212

மேலே