அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்
பாவலர் கருமலைத்தமிழாழன்

சலசலென ஓடிவந்த ஓடை
----சங்கீதம் பாடிவந்த ஓடை
கலகலென சிரித்துவந்த ஓடை
----கால்பதிய ஆடிவந்த ஓடை
நிலத்தாயின் பாலாக ஊறி
----நிறைசுவையைத் தேக்கிநின்ற ஓடை
நலமிழந்தே ஏடுகளில் மட்டும்
----நாம்படிக்கும் அவலமான தின்று !

சிற்றூரின் அழகென்றே நின்று
----சிலிர்ப்பூட்டி மிளிர்ந்ததந்தக் காலம்
வற்றிப்போய் தடம்மட்டும் காட்டி
----வரைகோடாய் ஆனதின்று கோலம்
நற்றாயின் அன்பூற்றாய்க் குன்றில்
----நறுந்தேனாய் ஊறிவந்த தன்று
வெற்றுத்தாள் போல்காய்ந்து குன்றும்
----வெறுமையாகிப் போனதுவே இன்று !

சிற்றோடை கழிவோடை யாக
-----சிறுமீன்கள் புழுபூச்சி யாக
பெற்றவளே பெண்சிசுவைக் கொல்லும்
----பெருங்கொடுமைப் போல்மாசு செய்தோம்
முற்றாக நம்வாழ்வை நாமே
-----முடிப்பதற்கு வழிவெட்டிக் கொண்டோம்
சற்றிதனை நாமெண்ணிப் பார்த்தே
-----சரிசெய்ய வில்லையெனில் வீழ்வோம் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (11-Oct-21, 1:04 pm)
பார்வை : 108

மேலே