காலம் தரும் பூச்செண்டு

காலம் தரும் செண்டு
======================
வறுமையெனும் சுமைகடந்து
விடுவதற்கே நாளும் - தினம்
வருங்கனவு நீளும் - ஒரு
வசந்தமென ஆளும் - அதை
வாழ்க்கையென நம்பிவிடின்
வறட்சிநிலை சூழும்
*
பொறுமையுடன் திட்டமிட்டுப்
புதுவாழ்வைத் தேடும் - சிலர்
புயலெதிர்க்கப் போடும் - பெரும்
போராட்டம் நாடும் - ஒரு
பொன்விடியல் தனைக்காட்டிப்
பூமாலை சூடும்
*
வாழ்வினிலே ஏற்றமதை
வரவழைக்க வென்று - பல
வழிகளிலே சென்று - பலர்
வாசலிலே நின்று - ஒரு
வசந்தமதைக் காண்பதற்கே
வதைபடுவா ருண்டு
*
ஆழ்கடலில் முத்தெடுக்க
ஆசைகொளல் போன்று - பெறும்
ஆர்ப்பரிப்பு தோன்றும் - அது
ஆழமாய்வே ரூன்றும் - தினம்
அலைமீதினில் படகாய்மனம்
அலைமோதிடத் தூண்டும்.
*
தூண்டுகின்ற ஆசைகளால்
துள்ளியெழும் நெஞ்சில் - ஒரு
துடிப்பெழுந்து கொஞ்சும் - அதன்
துணைக்குவரும் பஞ்சம் - அதன்
தூண்டிலிலே மாட்டிவிடத்
துயரங்களே மிஞ்சும்.
*
தாண்டிவிட வேண்டுமெனத்
தவிதவிக்கும் பொழுது - வரும்
தடங்கலெனும் பழுது - அதைத்
தவிர்ப்பதற்கு அழுது - பெருந்
தடையுடைக்க கரங்கொடுக்கும்
தனிமுயற்சி விழுது
*
வேர்களற்றுப் போயிடினும்
விழுதுகளால் தாங்கும் - மனம்
விருட்சமென ஓங்கும் - அதில்
விடியும்வரை தூங்கும் - ஒரு
விடைதெரியா துயர்பறவை
வெண்பனிபோல் நீங்கும்.
*
காரிருளை நீக்குகின்றக்
கதிரவனைக் கண்டு - தினம்
கடமைசெலும் வண்டு - அதைக்
கருத்தினிலே கொண்டு - உன்
காரியத்தை நீயாற்றக்
காலம்தரும் செண்டு
**
* மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-Oct-21, 1:11 am)
பார்வை : 129

மேலே