அறப்போர் வெற்றிப்பண்
வெல்லும் வெறி கொண்ட வேடமிடும் மாந்தர்க்கு
சொல்லி, நெறி யுரைத்த நல்லோர் வாழியவே !
அள்ளும் மொழி பேசி, பெருவணிகன் கொழித்திடவே
புனைந்திட்ட கொடும் சட்டம் கொன்றோர் வாழியவே!
சுழன்றும் ஏர் பின்னியதென செப்பிடும் குறள்வழியே
உழன்று ஊருக்கு உணர்த்திய உழவோர் வாழியவே!
சுரண்டும் பெருநிறுவனத்தோர் விரித்த பெரும்வலையை
உணர்ந்து உயிரீந்து ஓரணியில் தகர்த்தோர் வாழியவே!
ஆதிக்க உணர்வோங்க எதேச்சதிகார எண்ணத்தோடு
வதைக்கும் ஆணவ சட்டங்கள் சிதைத்தோர் வாழியவே
எதிர்ப்போர் தம்மக்களை எதிரிபோல் திரித்துரைத்தும்
எள்ளியும் நகையாடியோர் வீழ்த்தியோர் வாழியவே!
அண்ணலின் அறப்போர்தம் புதுவடிவம் கண்டுநின்றோம்.
அதிகார மமதைதமை அடக்கியோர் வாழியவே !
பின்னாளில் வந்தோர்க்கும் புரியவைத்த போராட்டம்.
அகங்கார ஆளுமைதனை ஒதுக்கியோர் வாழியவே!
வெற்று கொடுந்திட்டங்களும், வெறும்வண்ண பேச்சுக்களும்,
ஏட்டு சுரைக்காயென இடித்துரைத்தோர் வாழியவே!
சற்றும் சளைக்காது கடும் வசவு ஏச்சுக்களும் ,
கேட்டும் கலங்காது மலையென நின்றோர் வாழியவே!
ஜெய் ஜவான்! ஜெய் கிசான்! செப்பினார் ஓர் தலைவர்.
அருந்தலைவர் பெருஞ்சொல்லை மெய்ப்பித்தோர் வாழியவே!
நீரின்றி அமையாது உலகென்றார் எம்பாட்டன் .
ஏரின்றி வளராது நாடு என்றுரைத்தோர் வாழியவே !
உழவுப்பணி வேண்டி, ஏங்கும் நிலை வரவேண்டும்.
உழவர் நிலை மாற உண்மைநல திட்டம் வேண்டும்.
உழவுத்தொழில் செய்தால் உயர்வு அடைந்திடுவோம்,
என்றொரு நாள் வருந்தனிலே முழுசுதந்திரம் பூண்டுவிடும்.
எட்டிவிடும் இலக்கென்றே எல்லோரும் உழைத்திட்டால்
நல்ல நேரம் நெருங்கிடுமே! நாட்டில் நலம் மலர்ந்திடுமே!
கட்டிவிடும் கதைத்தவிர்த்து நல்வாய்ப்புகளை அமைத்திட்டால்,
வெல்லும் நேரம் வசப்படுமே! உழவர்வளம் மிளிர்ந்திடுமே!