இரண்டு எனக்கு மூன்று உங்களுக்கு
ஒரு கல்யாணம் சென்று வந்தேன்.சென்ற இடத்தில் இனிப்பாக இருந்தது என்று இரண்டு லட்டை சுவைத்தேன்!
நெய் வாசனை கமழுது என்று இரண்டு மைசூர் பாகை உள் வாங்கினேன்
பல்லுக்கு உழைப்பு கொடுக்க இரண்டு அல்வாவை வாயில் தள்ளினேன்!
நாக்கில் கொஞ்சம் ஊறட்டும் என இரண்டு ஜாங்கிரிகளை அதன் மேல் வைத்தேன்!
இனிப்போடு நிறுத்தி கொண்டால் பல் விட்டு விடும் என்று நினைத்து இரண்டு நெய் முறுக்கு, இரண்டு தட்டை, இரண்டு
போண்டா மற்றும் இரண்டு மெது வகைகள் மட்டுமே ருசித்து மென்றேன்!
அது என்னடா என்றால், சிறிது நேரத்தில் வயிற்றில் ஒரு மாதிரியான மாற்றங்களை உண்டு பண்ண தொடங்கியது!
சர்க்கரை தனி, நெய் தனி, எண்ணெய் தனி என தனித்தனியாக பிரிந்து வயிற்றில் லேசாக ஆட்டம் போடத் துவங்கியது' குரூப் டான்ஸ் மாதிரி!
இதைத் தொடர்ந்து நெஞ்சில் பள்ளியில் லேபில் கண்ட ஏதோ ஒரு அமிலம் போல உருவாகி, நெஞ்சு கொஞ்சம் எரிகிற மாதிரி இருந்தது!
பின்னர் இந்த அமிலம் என் நெஞ்சிலிருந்து இறங்கி வயிற்றில் சென்றது. இத்தனைக்கும் நான் இந்த மாதிரி நீங்கள் செய்ய வேண்டும் என்று ஒரு கட்டளையைக் கூட என்னுடைய எந்த உடல் உறுப்புக்கும் பிறப்பிக்க வில்லை!
வீட்டில் சம்சாரம் கேட்டாள் " ஓசியில் கிடைத்தாலும் அளவாக எடுத்துத் கொள்ளுங்கள் என்று நான் சொன்னதை கேட்காததின் விளைவு இப்போது புரிந்ததா? "
மோரில் பெருங்காயம் கலந்து கொடுத்தாள், இரண்டு டம்ளர் குடித்தேன்
இரண்டு முறை இரண்டு இரண்டாக ஜெலூசில் மாத்திரைகளை வாயில் போட்டு மென்றேன்!
ஏற்கனவே சரியான தூக்கம் இல்லாதவன், இந்த அமிலம் செய்த புரட்சி காரணமாக தூக்கத்தை காணாமல் தவித்தேன்! அன்று இரவு தூக்கத்தை கண்டு கண்மூட முடியாமல்
அடுத்த நாள் காலை இரண்டு மணி நேரம் உறங்கி கண் விழித்து, "இனிமேல் இது போன்ற ஒரு விபரீத விளையாட்டு வேண்டாம் என்று முடிவு செய்தேன்!
இன்னும் எவ்வளவு மணி நேரம் இந்த முடிவை அமல் படுத்துவேன் என்று எனக்கு தெரியாது, அதனால் நீங்கள் தயவுசெய்து நல்ல மனசு பண்ணி கொஞ்சம் கண்டிப்பாக என்னை கண்டித்து வையுங்கள்!
(ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...என்னது நீங்களும் அந்த கல்யாணத்துக்கு வந்து இரண்டு இல்லாமல் மூன்று மூன்று என்று தின்றீர்களா.....ஓஓஓஓ. முழுங்கினீர்களா? அடக் கடவுளே நான் எங்கே போய் முட்டிக் கொள்ள?)