மானுட நேயம் வளர்ப்போம்
வேற்றுமையை வளர்த்துஇங்கு வேறுபட்டு நின்றிடாமல்
ஊற்றுபோலும் நல்லுணர்வை ஊட்டியிங்கு மகிழ்ந்திடலாம்
நாற்றுபோலும் இணக்கமதை நாளுமிங்கு நட்டுவைத்தால்
மாற்றமதும் இதயமதில் மனநிறைவைத் தந்திடுமே !
எந்தமதம் ஆனாலும் மனிதமதம் ஆகிவிட்டால்
நொந்துபோகும் வாழ்கையதும் துளிர்விட்டு தழைத்திடுமே !
வெந்தணலாம் வேதனையை வீதியிலே விதைவிட்டு
மந்தையென மானுடத்தை மடைமாற்றம் செய்யலாமோ ?
நேர்வழியில் செல்லுகின்ற நெஞ்சுரத்தைக் கொண்டுவிடின்
சீர்கெட்ட சமுதாயம் சிறப்பதனை அடைந்துவிடும்
கூர்கெட்ட கொடுமதியார் கொட்டமதும் மாண்டுவிட
ஏர்பிடித்து உணவூட்டும் ஏழையெல்லாம் வாழ்வாரே ?
வாயாலே வடைசுட்டு வசதியிலே வாழ்ந்திடுவார்
நோயாலே கட்டுண்டார் வேதனையைக் காண்பாரோ ?
தீயாலே தினந்தினமும் சுட்டுஅவர் மகிழ்ந்தநிலை
ஓயாதோ எனும்ஏக்கம் ஒழிந்திங்கும் போகுமன்றோ ?
வட்டத்திலே வடம்பிடித்து தேர்ஒட்டும் போதினிலும்
எட்டிஎட்டி ஓடுகின்ற எதிர்காலம் வருகுதன்றோ ?
எட்டாத உயரத்தில் ஏணிவைத்து ஏறிநின்று
ஒட்டாத மாந்தரையும் உறவாக்கி மகிழ்வாரே ?
எதுவொன்று மானுடத்தை இணைக்காமல் தடுக்கிறதோ
அதுவொன்றை அகிலத்திலே இல்லாது பண்ணிவிட்டால்
பொதுவாகும் எல்லாமும் பொய்மையதும் புதைந்துவிடும்
புதுமையெல்லாம் பூத்துவந்து பூமாலைச் சூட்டிடுமே ?
மடமையினால் கட்டுண்ட மானுடமும் மாறிவிடும்
இடரெல்லாம் வீழ்ந்ததென்று இனிய இசை இசைத்துவரும்
முடக்குவாதக் கூட்டமெல்லாம் மூலையிலே முடங்கிவிட
தடைஎங்கும் இல்லாமல் தன்மானம் வளருமன்றோ ?
கல்விக்குத் தடைபோடும் கயமையதும் வீழ்ந்துவிடும்
எல்லோரும் உயர்கல்வி உரிமையுடன் கற்றிடுவார
பள்ளமெல்லாம் மேடாகும் பகுத்தறிவு குன்றேறும்
கொள்ளையிட்ட கூட்டமெல்லாம் குப்பையிலே வீழுமன்றோ?
மனிதநேயம் வளர்ந்தாலே மனங்களையும் மாற்றிடலாம்
தனிமனிதச் சமுதாயம் தனித்தியங்க இயலாது
புனிதநீரும் புனிதமண்ணும் புதுப்பிறப்பைத் தந்துவிடும்
இனிதாகி இனித்துவிடும் மனிதநேயம் வளர்வதாலே !