பாரதி இன்றிருந்தால்

காசிநகர் பேச்சதனைக் குமரியிலே
கேட்டிருப்பான் – கண்ணாலே- பார்த்திருப்பான்
குருவியெல்லாம் காணாமல் போனதாலே
துடித்திருப்பான் –நெஞ்சம் – வெடித்திருப்பான்.

தொழிற்சாலை பெருகியதால் தலைதன்னை
நிமிர்ந்திருப்பான் –நெஞ்சமதும் –நெகிழ்ந்திருப்பான்.
ஆயுதங்கள் பெருகியதால் இன்றுஅவன்
மகிழ்ந்திருப்பான் –அழிவுகண்டு –இகழ்ந்திருப்பான்.

புகைகக்கி அழிவுதரும் எனக்கண்டு
புழுங்கிருப்பான் –தன்னையவன் –இழந்திருப்பான்.
பகைநிறைந்த உளந்தன்னை பார்த்தவனும்
பதைத்திருப்பான் –காலால் –உதைத்திருப்பான்.

வீழாமல் சாதிகளும் நிலைத்திருக்க
நொந்திருப்பான் –நெஞ்சம் –வெந்திருப்பான்
தாழாமல் மடமைகளும் வீற்றிருக்க
கொதித்திருப்பான் –அதனை –மிதித்திருப்பான்.

பெண்பிள்ளைப் படும்பாட்டை அறிந்திருந்தால்
பொங்கிருப்பான் –புயலாகி –எழுந்திருப்பான்
உண்மைகளைப் புதைக்கின்ற வஞ்சகரை
உமிழ்ந்திருப்பான் –அவர்நெஞ்சைப் –பிளந்திருப்பான்.

வஞ்சகத்தால் வாழ்ந்திருப்பார் நிலைகண்டு
பொங்கிருப்பான் –நெருப்பால் –பொசுக்கிருப்பான்
அஞ்சாமல் பழியென்றும் செய்வாரை
சுட்டிருப்பான் –அவர்உறவை –வெட்டிருப்பான்.

சுதந்திரத்தை உணராத பேடிகளைப்
பழித்திருப்பான் –விழியாலே –வீழ்த்திருப்பான்
மதத்தாலே மானுடத்தைக் கெடுப்போரை
மிதித்திருப்பான் –உண்மையினை –உரைத்திருப்பான்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (10-Jan-22, 6:24 pm)
பார்வை : 53

மேலே