தைப்பிறந்தால் வழி பிறக்கும்

தைப்பிறந்தால் இனிமைகளே தரணியெங்கும் நிறைத்திருக்கும்
பொய்மைகொண்ட மயக்கமெல்லாம் புவியினிலே புதைந்திருக்கும்
வாய்மையது வையமெல்லாம் வாழ்த்தோடு காத்திருக்கும்
நெய்மணக்கும் பொங்கலதும் வாயோடு மணத்திருக்கும்.

தொற்றிவந்த தொற்றெல்லாம் துயருற்று வீழ்ந்திருக்கும்
வற்றிருக்கும் ஏரியெல்லாம் வயிர்நிரம்பி மகிழ்ந்திருக்கும்
முற்றிவிட்ட தானியங்கள் முற்றத்தில் கொட்டிருக்கும்
உற்றவொரு உறவெல்லாம் ஒன்றுமையாய் வாழ்ந்திருக்கும்.

புத்தாடை அணிவதிலே பேரின்பம் பொங்கிவரும்
புத்தரிசு பொங்கலிட புதுமணமும் கூடிவரும்
எத்திசையும் பொங்கலோ பொங்கலென போற்றுகின்ற
வித்தகமாய் மகிழ்வலைகள் சேர்ந்தங்கு தவழ்ந்துவரும் !

பழமைகளைக் கழித்துவிட்டு புதுவாழ்வு வாழ்ந்திடவும்
இழந்திருக்கும் இன்பநிலை இனியிங்கு கண்டிடவும்
குழந்தைகளின் கூட்டமெல்லாம் கொண்டாடி மகிழ்ந்திடவும்
அழகான தைபொங்கல் இன்றிங்கு வந்ததுவே !

உயிர்வாழ உதவுகின்ற உணவுதனை ஆக்கிடவே
பயிர்பச்சை தானியத்தைப் பாங்கோடு விளைவிக்க
அயராமல் உறவாகி உழைக்கின்ற மாடுகளை
உயர்த்திடவே வாழ்த்திடுவார் மாட்டுக்கும் பொங்கலிட்டு !

மனிதநேயம் உலகெங்கும் மலைபோலும் வளர்ந்திருக்க
புனிதமான மதமெல்லாம் பகைக்குணத்தை மறந்திருக்கும்
இனிக்கின்ற வாழ்வாலே இதயமது நனைந்திருக்க
பனிபோலும் பக்குவமாய் பாறைமனம் உருகிருக்கும்.

இனவெறியும் மதவெறியும் இல்லாது தொலைந்திருக்க
பணம்மட்டும் வாழ்வில்லை என்றநிலை விளைந்திருக்கும்
மனமோடு மனங்கலந்து மகிழ்வெங்கும் நிறைந்திருக்க
பனைபோலும் மானிடரும் பலன்தந்து வாழ்ந்திருப்பர்.

பிணிவந்தால் வீழ்கின்ற பாடமதைக் கற்றதனால்
அணுகொண்டு அழிக்கின்ற ஆணவத்தை விட்டிருப்பார்.
பணிசெய்து கிடப்பதுவே பண்பட்ட வாழ்வென்று
பணிவோடு இருந்திடுவார் !பக்குவத்தைப் பெற்றிடுவார்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (10-Jan-22, 6:26 pm)
பார்வை : 595

மேலே