சின்ன பொய்

சின்ன பொய்

நாகராஜன் சார் ஆளையே பார்க்க முடியலை ? கடைப்பக்கமே இரண்டு மாசமா காணோம் முகத்தில் வெளுத்த தாடியும் மீசையும் தெரிய முகத்தில் கவலையுடன் நின்று கொண்டிருந்தவர் கொஞ்சம் உடம்பு சரியில்லை நாராயணா என்று சொன்னார். அதுக்காக கடைக்கே வராம இப்படி மீசையும் தாடியுமா இருக்கணுமா சார் ? மனசு சரியில்லை நாராயணா, என்ன பண்ணி என்ன பிரயோசனம், தனக்குள் அலுத்துக்கொண்டவர் கிளம்ப ஆயத்தமானார்.
சார் மனசு கிடக்கட்டும் முதல்ல உட்காருங்க, இவருக்கு சேவிங் மட்டும்தான் முடிச்சவுடனே உங்களுக்கும் பண்ணி விடறேன். சொன்னவரிடம் எனக்கு எதுக்கு நாராயணா? இனிமேல் கட்டிங்க், சேவிங் எல்லாம், அலுத்துக்கொண்டார்.மனுசன் ஏதோ பெரும் கவலையுடன் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட நாராயணன் சார் அதைப்பத்தி பேசலாம் கொஞ்சம் உட்காருங்க, கஸ்டமருக்கு சேவிங்கை ஆரம்பித்தான்.
அந்த நகரில் நான்கு சலூன் கடைகள் உண்டு. இவனது கடை நகரை ஒட்டி உள்ள காலனியில் உள்புறம் அமைந்திருந்தது என்றாலும், இவனது வாடிக்கையாளர்கள் இவனை தவிர வேறு எங்கும் செல்ல விரும்ப மாட்டார்கள். காரணம் இவன் தொழில் திறமை என்பதை விட இவனது பேச்சு எப்பேர்ப்பட்ட ஆட்களையும் வசீகரம் செய்து விடும்.
பலருக்கு முடி வெட்டிக் கொண்டிருக்கும் போதே அவர்களது பிரச்சினைகளை இவனிடம் சொல்வர். இவன் அதற்கு ஏதாவது ஒரு தீர்வை சொல்வான். அது அவர்களுக்கு ஏற்றதாக பெரும்பாலும் இருந்து விடுவதால் வேலை முடிந்த பின் தனது கவலைகளை இறக்கி வைத்த சந்தோசத்தில் செல்வர். இதனால் குடும்பஸ்தர்களுக்கு இவன் கடை ஒரு வரப் பிரசாதம். இளைஞர்கள் இவனை தேடி வரும் பொழுது தவறான பாதையில் அவர்கள் செல்வது தெரிந்தால் அவர்கள் முன்னாலேயே சொல்லி விடுவான். ஆரம்பத்தில் அவன் சொல்லை கேட்காமல் ஈடுபட்டவர்கள் அதன் விளைவினால் “அண்ணே நீங்கள் சொன்னது சரிதான்னே”, என்று சொல்லி வருத்தப்படுவர். அதற்கும் ஏதாவது ஆறுதல் சொல்லிவிடுவான்.
தலையில் தண்ணீர் அடித்து முடி வெட்ட ஆரம்பிக்கும்போதே நாகராஜன் அவரது பிரச்சினைகளை சொல்ல ஆரம்பித்து விட்டார். அவருக்கு வரிசையாக மூன்று பெண் குழந்தைகள். இவருக்கும் தனியார் கம்பெனியில் வேலை. எப்படியோ தட்டி முட்டி பெண்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதில்தான் இப்பொழுது சின்ன சிக்கல், பெரிய பெண் கொஞ்ச நாட்களாக சரியில்லாதது போல் அவருக்கு படுகிறது. கல்லூரிக்கு போய் கொண்டிருக்கிறாள். இது இரண்டாவது வருடம், இவள் படித்து முடித்து ஏதாவது ஒரு வேலைக்கு வந்தால்தான் இவருக்கு ஒரு துணை கிடைத்தது போல் இருக்கும். அப்படி நினைத்து கொண்டிருக்கும் போது அந்த பெண்ணின் நடவடிக்கைகளை பார்த்த இவருக்கு இந்த வயதில் வரும் காதல் கீதல் போனற வற்றில் விழுந்து விட்டாளோ ? என்ற பயம் வந்து விட்டது. அதை எப்படி கேட்பது என்று தெரியாமல் மனதுக்குள் புழுங்கிக்கொண்டே இருக்கிறாராம்.
என்னதான் சினிமாவில் காதல் காட்சிகளை பார்த்தாலும் தன் வீட்டில் அப்படி நடக்கிறது என்று தெரிந்து விட்டால் ஒவ்வொரு மனிதனும் பதறி விடுகிறான். அதுவும் நடுத்தரமாய் வாழ்க்கையை ஓட்டும் பெரும்பாலோர் சுத்தமாய் மனதை விட்டு விடுகின்றனர். பக்கத்து வீட்டுக்காரர்களோ, சொந்தக்காரர்களோ, இனி நம்மை மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணமே அவர்களை கலங்க அடித்து விடுகிறது. இதை மனதுக்குள் ஓட விட்ட நாராயணன் சார் இதுக்கெல்லாம் கவலைப் பட்டு மனசை கெடுத்துக்காதீங்க. எதையுமே வெளிப்படையாய் பொண்ணுகிட்டே பேசுங்க சார் இந்த காலத்துல பசங்க எல்லாம் புரிஞ்சுக்கறவங்களாத்தான் இருக்காங்க, சொன்னவன் அவருக்கு முடி வெட்டிவிட்டு சேவிங்க்கையும் முடித்தவன் நான் ஒரு யோசனை சொல்றேன், அதைய சும்மா உங்க பொண்ணு கிட்டே காதுல போட்டு வையிங்க, என்று சொல்லி அவர் காதில் ஏதோ சொன்னான்.
நாகராசன் கொஞ்சம் தெளிவு பெற்றவராக கட்டணத்தை கொடுத்து விட்டு நீ சொன்ன யோசனையை செஞ்சு பாக்கறேன், ரொம்ப நன்றி நாராயனா, சொல்லிவிட்டு கிளம்பினார். அதற்குள் அடுத்த கஸ்டமரை பார்க்க ஆரம்பித்திருந்தான் நாராயணன்.
ஒரு மாதம் ஓடியிருந்தது, நாராயணா ! என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க “கட்டிங்” பண்ணனும்” இன்னும் எத்தனை பேர் இருக்காங்க ? கேட்டு நாகராஜன் நின்று கொண்டிருந்தார். வாங்க சார் இன்னும் ஒருத்தர்தான் இருக்காரு, உட்காருங்க, இல்லே நிக்கறேன், முகத்தில் பழைய களை வந்திருந்தது.
சார் சந்தோசமா இருக்கீங்க போலிருக்கு ? முடி வெட்ட தலை முடியை வாகாய் சரி செய்து கொண்டே கேட்டான். ஆமா நாராயணா, நீ சொன்ன யோசனையை பொண்ணுகிட்டே சும்மா சொல்ற மாதிரி சொன்னேன். அதுக்கப்புறம் இரண்டு மூணு நாள்ல அவளுடைய நடவடிக்கை எல்லாம் பழைய மாதிரி இல்லை. இப்பவெல்லாம் ரொம்ப ஈடுபாட்டோட படிக்க ஆரம்பிச்சுட்டா, நானும் ஒரு முடிவு பண்ணிட்டேன் அவளை மேல் படிப்பும் படிக்க வச்சிடணும்னு
கண்டிப்பா படிக்க வையுங்க சார், படிக்கிற வயசுல இந்த பிரச்சினை வர்றது நாம பாக்கறது தானே, சொல்லிக்கொண்டே தன் வேலையை தொடர்ந்தான் நாராயணன்.
அவன் சொன்ன சின்ன யோசனையால் தன் பெண்ணிடம் “நம் சொந்த்தில் டாக்டர் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பையனுக்கு உன்னை பெண் கேட்டார்கள், நான் தான் டாக்டருக்கு கொடுக்கணும்னா என் பொண்ணும் புரொபசர் அளவுக்கு படிக்க வச்சுட்டுத்தான் கொடுப்பேன் அப்படீன்னு சொல்லிட்டேன், நான் சொன்னது சரிதானே ? சொல்லிவிட்டு அவள் முகத்தை பார்த்த பொழுது கொஞ்ச நேரம் சலனமில்லாமல் இருந்த முகம் பின் பிரகாசமாய் அடுத்த வருசம் முடிஞ்சவுடனே மேல் படிப்புக்கு அப்ளை பண்ணிடறேம்ப்பா என்ற பதிலை மட்டும் சொன்னாள்.
இதிலிருந்தே அவள் மனதில் “ டாக்டர் மனைவி “ ஆக வேண்டும் அதற்கு தானும் ஒரு புரொபசர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டதை தெரிவித்தது. சொன்னது “பொய்தான்” என்றாலும் வருங்காலத்தில் அவளது கல்வித்தரம் மூலம் அவளுக்கு டாக்டர் மாப்பிள்ளை கிடைக்கலாமல்லவா?
இப்பொழுது சபலப்படும் அவள் மனதை மாற்றி படிப்பில் கவனத்தை செலுத்த வைத்தால் போதும் என்று நினைத்து கொண்டார் நாகராஜன்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (18-Jan-22, 10:45 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : sinna poy
பார்வை : 227

மேலே