குழவிகளுற்ற பிணியின்னா - இன்னா நாற்பது 35
இன்னிசை வெண்பா
எழிலி யுறைநீங்கின் ஈண்டையார்க் கின்னா
குழலி னினிய1மரத் தோசைநன் கின்னா
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான் பேதை யெனல். 35
- இன்னா நாற்பது
பொருளுரை:
மேகமானது நீரைச் சொரியாதாயின் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்குத் துன்பமாகும்;
புல்லாங்குழலைப் போலும் இனிய மரத்தினது ஓசை மிகவுந் துன்பமாகும்;
குழந்தைகள் அடைந்த நோயானது துன்பமாகும்;
அழகினையுடையவன் அறிவில்லாதவன் என்று சொல்லப்படுதல் துன்பமாகும்.
உறை - நீர்த்துளி
விளக்கம்:
‘குழலின் இனியமரத்து ஓசைநன் கின்னா' என்பதன் கருத்து காற்று ஊடறுத்துச் செல்லுதலால் மரங்களிலிருந்து எழும் ஓசை குழலிசை போலினியதாயினும் பாராட்டப்படுவதில்லை எனப்படுகிறது. குழலில் என்னும் பாடத்திற்குக் குழல் இல்லாத என்று பொருள்.