சிறியார்மேற் செற்றங் கொளல் இன்னா - இன்னா நாற்பது 37

இன்னிசை வெண்பா

நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து1 போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல். 37

- இன்னா நாற்பது

பொருளுரை:

நல்ல மலரானது மிகவும் சிறந்த மணம் வீசாதிருப்பது துன்பமாகும்;

துறையின் ஆழம் அறியாதவன் நீரில் இறங்கிச் செல்வது துன்பமாகும்;

நூற்பொருள் அறியாதவன் அறிவுடையோரால் வினவப்படுதல் துன்பமாகும்;

அவ்வாறே, குணத்தால் சிறியவர் மீது சினங் கொள்வது துன்பமாகும்.

விளக்கம்:

நறிய - நல்ல, அழகுடைய, துறை - நீரில் இறங்குதற்கும் ஏறுதற்குமுரிய வழி,

அறியா நீர் என்பது பாடமாயின் அறியப்படாத நீர் என்க.

சிறியார் - வெகுளி செல்லுதற்குரிய எளிமையுடையார்; குழவிப் பருவத்தினருமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jan-22, 5:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே