குடிப்பிறந்தார் அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றாவர் – நாலடியார் 150
இன்னிசை வெண்பா
எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவர்;
அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும் 150
குடிப்பிறப்பு, நாலடியார்
பொருளுரை:
நீரற்ற காலத்தும், அகன்ற ஆறு சற்றுக் குழி தோண்டிய காலத்தில் விரைவாகத் தெளிநீர் ஊறி உதவும்.
அதுபோல, கையில் எத்தகையதொரு பொருளும் இல்லாத காலத்தும் உயர்குடிப் பிறந்தார் ஆதரவற்றுத் தம்மை அடைந்தவர்க்கு அவரது தளர்ச்சிக் காலத்தில் ஊன்றுகோல் போல் உதவுவர்;
கருத்து:
குடிப்பிறந்தார் எந்நிலையிலும் தம்மை அண்டியவரின் தளர்ச்சிக் காலத்தில் ஊன்று கோல் போல் உதவுவர்.
விளக்கம்:
எற்றொன்று மென்றார், சிறிதுமென்றற்கு ஊன்றுகோல் ஊன்றென நின்று பின் ஊற்று என வலித்தது.
மேன்மக்கள் – குணத்தால் மேம்பட்ட நன்மக்கள்