மாண்டவர் மாண்ட வினைபெறுப – நான்மணிக்கடிகை 57
நேரிசை வெண்பா
மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே - யாண்டும்
பிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர்
துறப்பார் துறக்கத் தவர். 57
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
அறிவால் மாட்சிமைப்பட்டவர்கள் மாட்சிமைப்பட்ட செயல்களை செய்யப் பெறுவர்;
அவ்வறிவு மாட்சிமையை வேண்டாதவர்கள் தம்மால் வேண்டப்படாத தீவினைப் பயன்களையும் இம்மை மறுமைகளிற் பெறுவார்கள்;
எப்பொழுதும் மேற்பிறப்பிற் பிறப்பவர்கள் அப்பிறப்பிற் பொருந்தும் அறத்தையே இருமையிலும் விரும்பி இன்புறுவர்;
யான் எனதென்னும் பற்றைத் துறப்பவர்கள் வீட்டுலகத்திற்கு உரியவர் ஆவார்கள்.
கருத்து:
அறிவான் மாட்சிமைப்பட்டவர்கள் மாட்சிமைப்பட்ட செயல்களையே செய்வார்கள்; அவ்வறிவு மாட்சிமையை வேண்டாதவர்கள் தீவினைப் பயன்களையும் பெறுவார்கள்; உயர்ந்த பிறப்பிற் பிறப்பவர்கள் அப்பிறப்பின் அறத்தை விரும்பிச் செய்து இருமையும் இன்புறுவர்; பற்றைத் துறப்பவர்கள் வீட்டின்பத்துக் குரியராவார்கள்.
விளக்கவுரை:
யாண்டும் - இடைநிலை விளக்காதலின் மற்றவற்றோடும் ஒட்டிப் பொருளுரைத்துக் கொள்க.
துறக்கத்தவ ரென்றே உரிமைப் படக் கூறினார், அது திண்ணமாதலின்.