உன்னில் மடியவும் வேண்டும்
அந்திப் பொழுதினில் உந்தன் மடியினில்
அன்புப் பிடியினில் தவழவும் வேண்டும் - நான்
அந்தப் பொழுதினில் ஆயிரம் கவிதைகள்
உந்தன் இதழினில் எழுதவும் வேண்டும்.
சிந்து நடையினில் சிந்தை மயங்கிட
சிலம்பம் முழுதும் கற்கவும் வேண்டும் - அந்தச்
சங்கம வேளையில் சங்கு கழுத்தினில்
சந்தனக் குழம்பை பூசவும் வேண்டும்.
உன்னில் என்னையும் என்னில் உன்னையும்
உண்மையாகவே காணவும் வேண்டும் - அந்தக்
கண்களில் தோன்றிடும் கனவுகள் யாவையும்
கவிதைகளாய் எழுதிட வேண்டும்.
முள்ளில் சிரிக்கும் ரோசாவாக
இதயமெங்கும் மலரவும் வேண்டும். - நான்
கள்ளில் மயங்கும் ராசாவாக
உன்னில் கரைந்து மயங்கவும் வேண்டும்.
கறைபடாத காதலென்று தரணியில்
என்றும் விளங்கவும் வேண்டும் - நான்
கரையை உடைத்த வெள்ளம் போலவே
கலந்து உன்னில் மடியவும் வேண்டும்.