கண்டதில் தெளிந்து
கலித்துறை
தோற்றங் கண்டே வாட்டம் கொள்ளாதே எதைக்கண்டும்
ஏற்றங் காணவே முயன்றே முன்னேறு துணிவாகவே
ஆற்றலை இழந்திட சுற்றமும் பழிக்கும் துவளாதே
கூற்றனே எதிரில் வருகையில் அச்சம் கொள்ளாதே (க)
போற்றும் பிறவி மனிதப் பிறவி துவளாதே
காற்றின் வேகத்தில் கணித்து வாழ்வை கைக்கொள்
சீற்றமாய் இருக்கும் போதினில் எதையும் செய்யாதே
ஆற்றின் நீர்போல் அனைத்தையும் காத்திட மனங்கொள் (உ)
விளையும் யாவும் உலைக்கு வந்து உணவாகுமோ
தளைத்தட்டிடும் வார்த்தையால் மரபுக் கவிதை கிட்டுமோ
அளையைப் பெரிய யானையால் சுட்டிட இயலுமோ
வளையா உலோகம் சிறந்த பொருளாய் மாறிடுமோ (ங)
நீரினைக் கக்கும் குண்டினை நாடுகள் ஆக்குமோ
காரின் குளிர்வை விரும்பையில் மாற்ற இயலுமோ
வேரின்றி மரத்தை ஆக்கியே வளர்க்க இயலுமோ
தீரமிலா ஒருவன் வாழ்வினை வெல்ல முடியுமே (ச)
பரிதியின் ஒளியும் காரும் பூமிக்கு முதன்மையாம்
குருதியும் தாய்மொழி உணர்வும் மனிதருக்கு முதன்மையாம்
இரவும் பகலும் எல்லா உயிர்க்கும் முதன்மையாம்
பிரிவும் இணைவும் உடலின் வளர்ச்சிக்கு முதன்மையாம். (ரு)
--- நன்னாடன்.