ஆயுளை அறியா யாவுமே

உன்னை ஒருநிலைப் படுத்திட உரமிடு
உன்னுள் புதியதாய் தோன்றிடும் மாற்றமும்
தன்னிலை உணர்த்தியே உயர்த்திடும் உணர்வாய்
உன்னிடம் முன்னிலை வந்தே பணிந்திடும்

விண்ணிலே உலாவும் மேகமும் தன்னை
உண்மையாய் உணரும் போதிலே மழையாய்
மண்ணிலே பொழிந்திட நீராய் மாறியே
வெண்துளி சாரலாய் வருவதை கண்டிடு

பூமியின் நிழலது இருளாய் மாறிட
பூமியும் சுழல்வதை நிற்கவா செய்யுது
சேமித்த அனலின் தன்மையை உணர்ந்த
பூமியே தானாய் இயல்பாய் சுற்றுது.

மரமென ஓருயிர் பிறந்தே உணவை
அருந்த ஊரெலாம் அலைந்தா திரியுது
இருந்த இடத்தை தனதாய் நினைத்ததால்
பெரியதாய் வளர்ந்து செழித்தே செழிக்குது

எளிதில் ஆவியாய் ஆகிடும் நீரது
ஒளிந்து நிழலில் நிற்கவா நினைக்குது
பளிங்காய் கதிருடன் இணைந்த சென்று
தெளிந்தே மீண்டும் புவியை சேருது

ஆயுளை அறியா யாவுமே உலகில்
தாயன் புடனே உயிர்களைப் பற்றுது
பேயாய் மனமுள மனதினால் இங்கு
ஓயாத துன்பமும் தோன்றியே ஆளுது.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Apr-22, 9:06 pm)
பார்வை : 239

மேலே