தினசரி பயணம்

புலரும் காலை பொழுதில்
பூபாளமாய் உன் குரல்...
கைகள் நீட்டியே காப்பியுடன்
நீ நிற்கும்போது
கைகள் நீட்டத் தொடங்கும்
இளஞ் சூரியனாய் உன் முகம்....
சுறுசுறுப்பாய் ....சிடுசிடுப்பாய்...
அடுப்பங்கரையில் சமைக்கும்போது
கொஞ்சம்கொஞ்சமாய்
சூடு ஏறும் ஆதவனாய் உன் தேகம்....
உச்சி வெயில் கொழுத்தும்போது
குளுகுளுவென்று உன் கையால்
சமைத்த மத்திய உணவில்
கண்டேன் உன் கனிவான முகம்...
சூடு தணிந்து மெல்ல குளிரத்
தொடங்கும் மஞ்சள் கதிரவனாய்
நீ கொடுக்கும் பஜ்ஜியும் காப்பியும்....
மாலையில் மேனியைத்தழுவும்
தென்றலாய்
தெரிந்தும் தெரியாமலும்
வளரும் சந்திரனாய்
மின்னும் உன் வதனம்...
இரவில் சுடும்
மெதுமெதுவான தோசையை
நீ பரிமாறும்போது
முழுநிலவாய் குளிரும் உன் புன்முறுவல் ....
இரவில் மோகனமாய்
உலகை கவ்வும் இருட்டாய்
நீ என்னை அணைக்கையில்
முடிவுக்கு வரும்
எந்தன் தினசரி பயணம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (3-Apr-22, 9:53 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : dhinasari payanam
பார்வை : 417

மேலே