தாய் இன்றி சேய் வெறும் பொய்
மூன்று மகன்களை ஏற்கனவே கொண்ட , என் தந்தையின் கையை, எப்படி பிடித்தாளோ என் அன்னை!
மூன்று பேரை ஈன்ற பின், எத்தனை வலிபட்டு என்னை பெற்றாளோ, என் அன்பு அன்னை!
அதன் பிறகு எவ்வளவு இன்னல்களுடன் இன்னும் இரண்டு குழந்தைகளை ஈன்றாளோ, என் அன்பு அன்னை!
பதினோரு மக்களை ஐநூறு ரூபாய் வருமானத்தில் எப்படிப்பட்ட துயரங்களை சந்தித்து, எப்படி வளர்த்தாளோ, என் அன்பு அன்னை!
நாற்பத்திநாலு வயதில் கணவரை இழந்து எப்பேர்ப்பட்ட கொடுமைகளை சந்தித்து, எங்களை வழி நடத்தினாளோ, என் அன்பு அன்னை!
மாடாக உழைத்து, ஓடாகத் தேய்ந்து, படாத பாடெல்லாம் பட்டு, எப்படி எங்களை கரை ஏற்றினாளோ, என் அன்பு அன்னை!
திருமணம் புரியாத, என் தம்பிக்கு அவள் கடைசி காலங்கள் வரை துணையாக இருந்து, எவ்வளவு அல்லல்கள் உற்றாளோ, என் அன்பு அன்னை!
யாரிடமும் எதையும் எதிர் பார்க்காமல், அனைத்தையும் எப்படி சமாளித்தாளோ, நடமாடிய, என் அன்பு அன்னை!
இறைவா, அவளை கடைசி காலத்தில், என்னுடன் வைத்து காப்பாற்ற
வாய்ப்பு கிட்டாமையால், வரம் கொடு, அவளுக்கு மீண்டும் மகனாக பிறக்க விடு என்னை!