அழகிய வதனா வருவாயா
அழகிய வதனா வருவாயா?
****************************************
பொருளுற அலைகிற சனமது அறியா
எருமையி லுலவிடு மெமனென விலையே
பருகிடு முயிரென வுளநிலை தகுமா எழிலோனே
*
பொருமலை சகியென பொதுவிதி தரவே
பொருதிடு நிலையொடு பொதுசன மிரவே
திருடரு மெழுதிய விதியொடு அழவே விடுவாயா
*
கருவுறு மடியொடு கடனுறு சிசுவா
யுருபெறு நிலையினி கடலலை யெனவே
வருவது முறையென வதைபட
விடுவா ரெதனாலே?
*
கருவிழி யொழுகிற நிலைதரு மரசோ
உருவிய நிதியொடு புரிகிற சதியே
சருகென உதிருரு பவரது விதியே எனலாமோ
*
ஒருவரு மிலையென உருகிடு பவரோ
இருவிழி கசிகிற நிலையினி லுளரே
வருடிட வெனவிரு கரமொடு இறைவா வருவாயா?
*
ஒருவித பயமதி லுளமதி லெழவே
உருகிடு மெழுகென அனலொடு விழுதே
வருகிற துயரினை எதிரிட துணிவே தருவாயே
*
இருவிழி கசிகிற இடருறு வெனவே
பெருகிய வறுமையு மறுபட வழிதா
கருவறை யுறைநிறை கருணையி னொளியே இறையோனே
*
இருளிலு மொளியிலை இடருது விழியே
கருணையி னுருவினி லுதவிட வெனவே
திருமலை எழுகிற அழகிய வதனா வருவாயா?
*
மெய்யன் நடராஜ்