உங்களுக்காக ஒரு கடிதம் 27

ஹலோ...
விட்டதை விட்ட இடத்திலிருந்து தொடருகிறேன். செல்போன் வாங்குவரை இருந்த உங்கள் கொஞ்சல்...கெஞ்சல்... இல்லையென்றால் பிடிவாதம்...அடாவடித்தனம் எல்லாம் மாறி...செல்போன் கையில் கிடைத்தவுடன் நன்றி சொல்லக்கூட மறந்து, அந்த பாழும் செல்போனில் புதைந்து போகிறீர்கள். அதன் பின் உங்களின் பார்வையே மாறிப்போய் விடுகிறது. ஆண் பிள்ளையாய் இருந்தால் எதை கேட்டாலும் பதில் சொல்வதில்லை.அப்படியே செல்வதானாலும் எரிந்து எரிந்து விழுகிறீர்கள். உங்கள் பதில்கள் 'ம்ம்..' 'அப்பறம் சொல்கிறேன்' என்று சொற்ப வார்த்தைகளில் சுருங்கி போய்விடுகிறது. சிலசமயம் ஒரு பார்வை...அவ்வளவுதான். உன்னால் எவ்வளவு புரிந்து கொள்ளமுடியுமோ புரிந்துகொள்ளுங்கள். புரியவில்லையா? That is not my problem ...என்று கூலாக போய்க்கொண்டே இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுக்கும் வரை எங்களுக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா? நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களோ இல்லையோ அதுதான் உண்மை. சங்கடத்தில் சிக்காதவரை ஓகே தான். சிக்கின பிறகு...கொஞ்சம் யோசித்து பாருங்கள். மானம்...மரியாதை...கௌரவம்...எல்லாவற்றையும் இழந்து, ஏன் நம் அடையாளத்தையே தொலைத்து அனாதையாய் நிற்கின்ற நிலை ஏற்பட்டு விடுமல்லவா? உணர்வுபூர்வமாக எண்ணாமல் அறிவுபூர்வமாக...எதார்த்தமாக நினைத்து பாருங்கள் உண்மை புரியும். கூடிய விரைவில் நீங்களும் ஒரு குழந்தைக்கு தந்தையாகப் போகிறவர்கள்தானே. இதுவும் ஆண்டாண்டு காலமாய் சொல்லிவருவதுதான். இப்படி பேசி..பேசி...எங்களை போரடிக்காதீர்கள். நீங்கள் சொல்வதெல்லாம் எங்களுக்கான ஆலோசனையா? இல்லை சாபமா? என்று நீங்கள் நினைப்பதும் கேட்பதும் எங்களுக்கு புரிகிறது. எங்கள் உயிருக்கு நாங்களே சாபம் கொடுக்க முடியுமா?
அதுவே பெண் பிள்ளையாயிருந்தால், உங்களுக்கிருக்கும் பிடிவாதம்தான் உலகம் அறிந்ததுதானே! எங்களுக்கும் உங்களை கரைசேர்ப்பதுவரை...உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைவதுவரை...அமைத்து கொடுக்கும் வரை எங்கள் தூக்கம் தொலைத்து நிற்கிறோம். பல சமயம் தொலைந்தும் போகிறோம். அதே செல்போன் வாங்கும் வரை.... மூஞ்சைதூக்கி வைத்து கொண்டு...உண்ணாவிரதம் இருந்து சாப்பிடாமல் அடம்பிடித்து....'டமால்' என்று கதவை சாத்திக்கொண்டு...கையை அறுத்துக்கொண்டு...இன்னும் என்னவெல்லாமோ செய்து வாங்கி விடுகிறீர்கள்...வாங்கி கொடுக்க வைத்து விடுகிறீர்கள். சரி வாங்கியபின்னால் என்ன நடக்கிறது?. பொறுமையாக கேளுங்கள். வாங்கிய செல்போனை வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உபயோகித்தால் உங்களுக்கு கோயில் கட்டி கொண்டாடிவிடலாம். அதை கொஞ்சம் பேர்தான் செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அந்த சிலந்தி வலையில் சிக்கி...சீரழிந்து...சின்னாபின்னமாகி...வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிர்மூலமாக நிற்கிறார்கள். உண்மையில் நடப்பது என்ன? இப்போதுதான் ஆறாங் கிளாசிலேயே 'லவ்' வந்து விடுகிறதே."டேய்...இது என் ஆளு.." என்று புரிந்தும் புரியாமலும்...தெரிந்தும் தெரியாமலும் உரிமை வந்து விடுகிறதே..... அதற்கு நெய் வார்ப்பதுபோல் டிவி சீரியல்களும்...சினிமாக்களும் படம் பிடித்து காட்டிவிடுகிறதே...ஆனால் சீரியல்களும்... சினிமாக்களும்...வேறெதுவும் கூட்டி காண்பிப்பதில்லை. நம் வாழ்வின் நிழல்தானே அவைகள். அவைகளால் நீங்கள் கத்து கொள்கிறீர்கள். உங்களைப்பார்த்து அவர்கள் எடுக்கிறார்கள். யாரை இதில் குற்றம் சொல்வது?.இயற்கையில் சுரக்கும் ஹார்மோன்களால் உங்களுக்குள் ஏற்படும் "க்ரஷ்"...அதனால் நீங்கள் செய்யும் திருவிளையாடல்களைப்பற்றி ஒரு 'டீசரை' காண்பிக்கிறேன். அதுவும் உங்கள் கையில் மினுக்கும் செல்போன்.... அதைவைத்து நீங்கள் செய்யும் மாயாஜாலங்கள் எத்தனை எத்தனை... செல் வாங்கினவுடன் நீங்கள் செய்யும் முதல் காரியம் 'ஸ்க்ரீன் லாக் ' செய்வது. ஏனினில் மற்றவர்.. முக்கியமாக பெற்றவர்... உங்கள் தொடர்புகளை பார்த்து விடக்கூடாது என்பதற்காகத்தான். இது உங்களுக்கே நன்றாகத் தெரியும். அதுவும் நம்பர் லாக். அந்த நம்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டு இருப்பது வாடிக்கையான ஒன்றாகிப் போனது. அடுத்து ஒவ்வொரு பேருக்கும் ஒவ்வொரு "ரிங் டோன்". அது அடிக்கும்போது நீங்கள் ஓடிவரும் வேகம்...அவசரமே...உங்கள் திருட்டுத் தனத்தை காட்டி கொடுத்து விடுகிறது. உங்களை பெற்றவர்கள்...உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
எங்களை ஏமாற்றி ...நடுவில் வந்தவன் அவனை நம்பி நீங்கள் செய்யும் காரியங்களை சிலவற்றை சொல்கிறேன்...

தொடரும்

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (16-Jul-22, 8:59 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 73

மேலே