காம்பன்ன தோளி கடிதிற் கடித்தோடும் பாம்பின்பல் கொள்வாரோ இல் - பழமொழி நானூறு 148
நேரிசை வெண்பா
முன்னலிந்(து) ஆன்ற முரண்கொண்(டு) எழுந்தோரைப்
பின்னலிதும் என்றிருத்தல் பேதைமையே - பின்சென்று
காம்பன்ன தோளி! கடிதிற் கடித்தோடும்
பாம்பின்பல் கொள்வாரோ இல். 148
- பழமொழி நானூறு
பொருளுரை:
மூங்கிலையொத்த தோள்களையுடையாய்! மிகவும் மாறுபாடு கொண்டு முற்பட்டுத் தம்மை நலிய எழுந்தவர்களை பின்னர் ஒருகாலத்து அவரை வருத்த மாட்டுவேம் என்று சோம்பி இருத்தல் அறியாமையேயாம்;
விரைந்து கடித்து ஓடுகின்ற பாம்பினது நச்சுப்பல்லை அதன் பின் சென்று கொள்வார் ஒருவருமில்லை.
கருத்து:
பகைவரை அவர் மாறுபட்டு எழுவதற்கு முன்னரே அறிந்து களைக என்றது இது.
விளக்கம்:
'பேதைமையே' என்று தேற்றினார், முன்னிருந்து களைதலன்றி அவர் மாறுபட்டு எழுகின்ற போழ்தும் களையாது பின்னர் ஒரு காலத்துக் களைவேம் என்றிருத்தலின். பின்னர்க் களைதல் ஒருதலையன்மையான் முன்னரே களைக என்பது.
கடியாததற்கு முன்னர்ப் பல்லைக் களையாது கடித்த பின்னர்க் களைபவர் இலராதல் போலப் பின்நலிதுமென்று இல்லாதிருத்தல் வேண்டும்.
'கடிதிற் கடித்தோடும் பாம்பின்பல் கொள்வாரோ இல்' என்பது பழமொழி.