செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும் நல்குவார் கட்டே நசை – நாலடியார் 263

இன்னிசை வெண்பா

மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்,
வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை 263

- நன்னெறியில் செல்வம், நாலடியார்

பொருளுரை:

பலவாக நிறைந்த அலைகளை உடைய கடற்கரையில் தாம் தங்கியிருந்தாலும் வலிதின் நீருறுதலுடைய உவர்ப்பில்லாத கிணற்றிற் சென்று மக்கள் நீர் பருகுவர்;

கீழ்மக்கள் அருகாமையே செல்வம் மிக உடையவராயினும், தக்கோரின் பொருள் விருப்பம் மிகத் தொலைவு சென்றும் உதவுவார் கண்ணதேயாகும்.

கருத்து:

செல்வமுடையோர் கீழோராயின், தக்கோர்க்கு அது பயன்படுதலில்லை.

விளக்கம்:

கடலில் இயல்பாக மிக்க நீரிருத்தல் போலின்றிக் கிணற்றிற் சிறுகச் சிறுக முயற்சியோடு நீர் வந்து கூடுதலின். ‘வல்லூற்றுக்கிணறு' எனப்பட்டது;

இயல்பாகப் பெருஞ்செல்வம் பெற்றிருத்தலின்றித் தாமே தம் முயற்சியாற் சிறுகச் சிறுகப் பொருளீட்டும் நிலையினராயினும், அவர் நல்குவோராயின் அவரிடமே தக்கோர் உள்ளஞ் செல்லுமென்பது கருத்து.

நல்குவாரென்றார், நல்கும் பேரினிமைக் குணமுடையாரென்றற்கு; உண்பரென்றது பொதுவினை,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Aug-22, 10:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே