இருட்டிலே முகங்காட்டும் திருட்டு நிலா

இருட்டிலே முகங்காட்டும் திருட்டு நிலா
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எழிலாக உலவுகின்ற இன்ப நிலவாம்
எனக்குள்ளே தவழுகின்ற ஏழை நிலவாம்
பொழிலாகக் கூந்தலிலே பூக்கள் உலாவாம்
பூமுடிக்கத் தோதானப் பூவை நிலவாம்
அழியாதக் கனவுகளில் அமர்ந்த நிலவாம்
ஆசைகளின் கால்களினால் ஆடும் நிலவாம்
விழியாலே பேசுகின்ற வெள்ளி நிலவாம்
விளக்கிற்குத் திரியாக விரும்பும் நிலவாம்
*
எதிர்கால வாழ்வுக்கு ஏற்ற நிலவாம்
இதயத்தில் தீபத்தை ஏற்றும் நிலவாம்
அதிராமல் நடக்கின்ற அணங்கு நிலவாம்
அளவாக உரையாடும் அன்பு நிலவாம்
புதிராக இருக்கின்றப் புனித நிலவாம்
பொறுமைக்கு நிகராகப் பூத்த நிலவாம்
இதிகாசம் காணாத இதய நிலவாம்
இருட்டிலே முகங்காட்டுந் திருட்டு நிலவாம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Aug-22, 2:05 am)
பார்வை : 141

மேலே