308 அறிவு மாண்புடையார்க்கு அவ்வியம் இல்லை – பொறாமை 6
கலிவிருத்தம்
(புளிமா விளம் மா கூவிளம்)
நிறையு நீர்க்கசை வில்லை நீணிலத்(து)
அரையுங் கல்வியில் அறிவின் மேன்மையில்
குறையு ளார்க்கலாற் கோதின் மாண்பினார்க்(கு)
இறையும் அவ்வியம் இல்லை யில்லையே. 6
- பொறாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நிறைகுடத்தில் உள்ள நீர் அசைந்து ஓசையிடாது.
இப்பெரும் உலகத்தில் கல்வியும், அறிவு மேன்மையும் இல்லாத குறையுள்ளவர்களிடம் பொறாமை உண்டு.
இவர்களைத் தவிர்த்து குற்றமில்லாத பண்புடையவர்களுக்கு சிறிதளவு கூட பொறாமை என்பது கிடையாது” என்கிறார் இப்பாடலாசிரியர்.
இறையும் – சிறிதளவும், அவ்வியம் - பொறாமை.