307 பொறாமைத் துன்பம் ஒருநாளும் போகாது – பொறாமை 5
கலிவிருத்தம்
(மா விளம் மா கூவிளம்)
மக்கள் பலருளார் மகிவி சாலமாம்
பக்க மவர்தினம் படைப்ப ரோர்நலம்
ஒக்க அதுபொறா துள்ள நைந்திடில்
துக்க மோயுமோ சொல்லென் நெஞ்சமே. 5
- பொறாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”என் நெஞ்சமே! உலகம் பெரும் பரப்பினை உடையது. அப்பரப்புக்கு ஏற்றவாறு மக்களும் பலர் வாழ்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நலம் பெறுவர்.
அவற்றையெல்லாம் கண்டு பொறுத்துக் கொள்ளாமல் மனம் இடிந்தால் அத்துன்பம் தீருமோ? நீ சொல்” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.
மகி - உலகம். உள்ளம் – மனம், நைந்திடில் - இடிந்தால், ஓயும் – தீரும்.