துன்பக்கு உறைபதி மற்றைப் பொருள் – நாலடியார் 280
நேரிசை வெண்பா
(’ட்’ ‘த்’ வல்லின எதுகை)
ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்(கு)
உறைபதி மற்றைப் பொருள் 280
- ஈயாமை, நாலடியார்
பொருளுரை:
பொருள் திரட்டுதலுந் துன்பம்; திரட்டிய சிறந்த பொருளைப் பாதுகாத்தலும் அவ்வாறே மிக்க துன்பமாகும்;
அங்ஙனம் பாதுகாத்த முறையில் பொருள்தன் அளவிற் குறைந்து போகுமாயின் துன்பமே, இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும் அழிந்து போகுமானால் பின்னும் துன்பம்; ஆதலால், பொருள் துன்பங்கள் எல்லாவற்றிற்குந் தங்குமிடமாகும்.
கருத்து:
துன்பங்களுக்கு உறைவிடமாயுள்ள பொருளைப் பயன்படுத்தும் முறையறிந்து வழங்குதலே அறிவுடைமையாகும்.
விளக்கம்:
முறையறிந்து பயன்படுத்தினால் அப்போது அஃது இன்பமும் அறமும் பயந்து தன்னை உடையானை விளக்கமுறச் செய்தலின், ‘ஒண்பொருள்' என்றார்,
துன்பம் என்பதை மனத்தளர்ச்சி1 என்றுரைத்தார் சிலப்பதிகார அரும்பத உரைகாரர்.
பிறர்க்கு வழங்கி ஈதலறம் புரிதலால், இத்துன்பங்கள் எல்லாந் தோன்றாதொழிந்து இன்பமும் உண்டாகுமாயின், அதுவன்றோ செயற்பாலதென்பது கருத்து.