நெடுவேல் கெடுத்தான் குடத்துளு நாடி விடும் - பழமொழி நானூறு 179

நேரிசை வெண்பா

யாவரே யானும் இழந்த பொருளுடையார்
தேவரே யாயினும் தீங்(கு)ஓர்ப்பர் - பாவை
படத்தோன்று நல்லாய்! நெடுவேல் கெடுத்தான்
குடத்துளு நாடி விடும். 179

- பழமொழி நானூறு

பொருளுரை:

சித்திரப் பாவையது தன்மை பொருந்தித் தோன்றும் நல்லாய்!

நீண்ட வேலைத் தொலைத்தவன் ஒருவன் குடத்துக்குள்ளேயும் தேடுவான்.

அதுபோல, கெடுத்ததொரு பொருளையுடையார் எத்தகைய சிறந்த அறிவினை யுடையவராயினும் முன்னிற்பார் தேவர்களேயானாலும் தமது பொருளைக் கைக்கொண்டார் எனத் தீமையாக நினைப்பர்.

கருத்து:

பொருளினை இழந்தார் ஆராயாது ஐயுறுவராயின் அது நோக்கி அவரை வெறுக்காது பொறுத்தல் வேண்டும்.

விளக்கம்:.

'யாவரேயானும்' என்றமையால் எத்தகையோரும் பொருளினை இழந்தவிடத்துத் தந் திறத்திற் சிறிது குன்றுவர் என்பது பெறப்படும்.

'தேவரே யாயினும்' என்றது இவர்பொருள் கொண்டு ஒன்றுஞ் செய வேண்டாது இயல்பாகவே நிறைந்த செல்வத்தினை யுடையார்;

அத்தகையோரையும் தீங்கோர்ப்பர் என உயர்ந்ததற்கு ஒன்று காட்டியவாறு.

நெடுவேல் தொலைத்தான், குடத்துள்வேல் இருக்க முடியாமையை அறியாது தேடினமை போல, ஐயுற வேண்டாத தேவர்களையும் ஐயுறுவர் பொருளினைஇழந்தார்.

'நெடுவேல் கெடுத்தான் குடத்துளு நாடிவிடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-22, 8:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே