பொருள்தக்கார் வேண்டாமை வேண்டியதெல்லாந் தரும் - பழமொழி நானூறு 178
இன்னிசை வெண்பா
ஆண்டகை மன்னரைச் சார்ந்தார்தாம் அல்லுறினும்
ஆண்டொன்று வேண்டுதும் என்ப(து) உரையற்க
பூண்டாங்கு மார்ப! பொருடக்கார் வேண்டாமை
வேண்டிய தெல்லாம் தரும். 178
- பழமொழி நானூறு
பொருளுரை:
அணிகலன்களை அணிந்திருக்கின்ற மார்பை உடையவனே!
ஆண் தகைமையை உடைய அரசர்களைச் சேர்ந்து ஒழுகுபவர்கள் தாம் வறுமையால் மிக்க துன்பத்தை அடைந்தாலும் அவரிடத்தில் ஒன்றனை விரும்புகின்றோம் என்று கூறாதீர்கள்.
ஏனென்றால், பிறரால் மிக மதிக்கப்பட்டார் ஒரு பொருளையும் விரும்பிக் கேளாதிருப்பதே அவர் விரும்பிய யாவற்றையும் தரும்.
கருத்து:
அரசனைச் சார்ந்தொழுகுவார் தமக்கு ஒரு பொருள் வேண்டுமென்று அரசனைக் கேளாதீர்கள் எனப்படுகிறது.
'பொருள்தக்கார் வேண்டாமை வேண்டியதெல்லாந் தரும்' என்பது பழமொழி.