இறைவன் தந்த வரமோ
பிறரை கெடுக்க நினைக்காத
பாவப்பட்ட மக்கள் வாழும் ஊரு
பசிபோக்க வேண்டி
பொழுது விடியுமுன்னே புறப்பட்டு
பகலெல்லாம் மலைமீது நடந்து
பணங்காசு பார்ப்பதற்குள்
பகலவனும் காணாமல் போவான்
வீட்டுக்கு திரும்ப காட்டுக்குள் புகுந்து
வழி தெரியாமல் இருட்டில் தவிப்பது
வாடிக்கை இவர்களுக்கு
சாலைகள் இல்லாத ஊரில்
சாதனை படைத்தது போல்
பிறந்த ஏழை குழந்தையின்
பெற்றோர்க்கு வாழ வசதியில்லை
பாலில்லை, பாதைகள் இல்லை
படுக்கக்கூட இடமில்லை
படிக்க பள்ளிக்கூடமும் இங்கில்லை
பிறந்த பிள்ளையை வளர்க்க
பெற்றவர்கள் படும்பாடு
பரமனுக்கும் தெரியாது
இங்குள்ள மக்களின் துயரங்கள்
எவருக்கும் தெரியாது
தான் படும் வேதனையை
தரணிக்கு தெரிவிக்க
தவிக்கும் மக்களின் துயர் போக்க
யாரிடம் முறையிட !
இது நாள் வரை
நீங்கள் வாழ்ந்ததெல்லாம்
இறைவன் தந்த வரமோ !