உங்களுக்காக ஒரு கடிதம் 30

ஹலோ பிரண்ட்ஸ் ....
இருக்கீங்களா? என் தவறுதான். இடைவெளியும் அதிகம் ஆகிவிட்டது. இனி தொடருவோம். உங்களோடு பகிர்ந்துகொள்ள விஷயங்கள் நிறைய இருக்கிறது. நேரம்...அதில்தான் கொஞ்சம் சிக்கல். போனது போகட்டும்..தொடர்பை தொடங்குவோம்...தொடருவோம். இப்போதும் பள்ளிக்கு செல்லும் உங்களுக்கானதுதான் இந்த கடிதம். கொஞ்சம் படியுங்கள். எங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயலுங்கள்.
பத்திரிகையை திறந்தால் இந்த செய்தி இல்லாமல் இல்லை தினமும். " பார்ட்டி ". ஆம் நீங்கள் கொண்டாடும் பார்ட்டிகளைப் பற்றித்தான் எழுதப் போகிறேன். பார்ட்டி கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். இப்போ இந்த வயதில் கொண்டாடவில்லையென்றால் எப்போ கொண்டாடுவது. சரிதான். ஒத்துக்கொள்கிறோம். ஏதோ கேக் வெட்டினோம்... பரிசுகள் தந்தோம்...சந்தோஷத்தை பரிமாறிக்கொண்டோம்...கிண்டல் அடித்தோம்..பாட்டு பாடினோம் ...ஒழுக்கமாக ... மரியாதை குலையாமல் ஆடினோம்...என்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் இப்போ என்ன நடக்கிறது என்று உங்களுக்கே நன்றாக தெரியும். நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எது எதற்குத்தான் பார்ட்டி கொண்டாடுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. பிறந்தநாள் மட்டுமல்ல ...பென்சில் வாங்கினால்கூட ஏன் செருப்பு வாங்கினால் கூட ஒரு பார்ட்டி. இது LKG UKG முதல் தொடங்கி விட்டது . போனால் போகட்டும்.கொடுமை என்னவென்றால் வெறும் கேக்..ஐஸ் கிரீம் மட்டுமல்ல " மது " பார்ட்டியாக மாறிப்போய் ரொம்ப காலம் ஆகிவிட்டது. அதைவிட கொடுமை பெண் பிள்ளைகளும் இதில் கலந்து கொள்வதுதான். இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் மதுவோடுகூட போதை வஸ்துக்கள்,அதோடுகூட தோழனையும்... தோழிகளையும் மாற்றிக்கொண்டு காமக்களியாட்டங்களில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம்?
நம் பண்பாடுகளின் தொன்மை...பெருமை...பற்றி வாய் கிழிய பேசுகிறோம். கவிதை..கட்டுரைகளாய் எழுதி தீர்க்கிறோம். ஆனால் உண்மையில் நம் கண்முன்னே நடப்பது என்ன? நம் சந்ததிகள் எங்கே போய் கொண்டிருக்கிறார்கள் ? அவர்களின் எதிர்காலம்தான் என்ன?நினைத்தாலே கூசி குறுகி போகவேண்டி இருக்கிறது. " நட்பு ".., என்ன உத்தமமான வார்த்தை.... உறவு... உயிர் காப்பான் தோழன். எங்கே போனான் அந்த உண்மையான தோழன்? தோள் கொடுக்கும் தோழமை மண்ணில் புதைந்து போனதோ! காதலுக்குகாக உயிர் கொடுக்கும் நட்பு தூக்கு போட்டு கொண்டதா என்ன? இங்கே காதலியையே பங்கிடுகிறானே... அப்போ உண்மை காதலே இல்லையா?எல்லாம் காம இச்சை தீரும் வரைதானா? எல்லாமே ஏமாற்று வேலைதானா? எல்லாரையும் ஏமாற்றும் லீலைதானா? தீபம் என்று எண்ணி அதையே சுற்றி...சுற்றி...வந்து உயிரை விடும் விட்டில் பூச்சிகள்தானா பெண்கள். சுடும் என்று நாங்கள் எச்சரித்தாலும் அதை கொஞ்சமும் காதில் வாங்காமல் ... வாழ்வையும் வாழாமல்...வாழும் வயதில் வாழ்வை முடித்துக்கொள்ளும் உங்களை பார்க்கும்போது எங்களால் எப்படி சும்மா இருக்க முடியும்? போவது உங்கள் உயிர்தான்...ஆனால் நீங்கள் எங்களின் பயிரல்லவா? பயிர் அழிவதை எங்களால் எப்படி தாங்கமுடியும்?
இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால்...ஒரு உணர்ச்சிவேகத்தில்... எதிர்காலத்தில் எது எது எப்படி எப்படி மாறும் என்பதைக்கூட நினைத்து பார்க்காமல்...பெற்றோரோ இல்லை மற்றவரோ சொல்வதை கேட்காமல்... அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு... அவமானப்படுத்திவிட்டு ...குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு ... காதலித்தவன்தான் காவலன் என்று...சொல்லாமல் ..கொள்ளாமல் பலி ஆடுபோல் அவன் பின்னாலேயே சென்று...சிறு வயதிலேயே தாயாகி...ஒன்றல்ல இரண்டல்ல பிள்ளைகளை பெற்று... மோகம் கலைந்தவுடன் எதார்த்த நெருப்பில் பொசுங்கிப்போகும் இள மொட்டுக்களை காணும்போது... ஓ...அழக்கூட கண்ணீரில்லாமல் கண்கள் வற்றிப்போய் கிடக்கிறதே. காதலிக்கும்போது பைக்கில் சுற்றிய காலங்கள் எல்லாம் கனவாய் கரைந்து...தினமும் குடித்துவிட்டு அடிப்பதும்...வேலைக்கு போகாமல் வீணே பொழுதை கழித்துக்கொண்டு...குடிப்பதற்கு காதலியை...மனைவியை அடிப்பதும் உதைப்பதையே தினம் தொழிலாக கடைப்பிடித்து...பவித்தரமான சம்சார பந்தத்தை தன இயலாமைக்கு வடிகாலாய்....ஆண்மையின் திமிருக்கு மகுடமாய்...குரங்குப்பிடியாய் பழக்கத்தை விட்டுவிடாமல் வாழ்வை குட்டிச்சுவராக வீணடித்து....வாழ்வை பாழாக்கிக்கொள்ளும் எத்தனை கதைகள் எங்கள் கண்முன்னே அரங்கேறியிருக்கிறது. இதையெல்லாம் பார்த்த பிறகும் எங்களுக்கு உங்கள் மீதோ...உங்கள் காதல் மீதோ எப்படி நம்பிக்கை வரும்? சொல்லுங்கள்...
தொடருவோம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (27-Sep-22, 8:36 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 71

மேலே