நீட்டிக்கிறேன் ஆயுளை

சுட்டுவிரல் நீட்டி
நீ சொல்லும் கட்டளைக்கு
மண்டியிடுகிறது
என் தாய்மை

உனை கொஞ்சும் பாவனையை
என்னில் அரங்கேற்றும் போது
மீண்டும் குழந்தையாகி
குதூகலிக்கிறது
என் மனம்

அழுவது போன்ற
சிணுங்கலுக்கு
உன் பிஞ்சுக் கைகள்
தாங்கி பிடித்து...
"தும்மா சொல்லித்தேன் அழாத"
அந்த பிள்ளைத்தமிழால்
இயங்குகிறது
என் பிரபஞ்சம்

உன் விரல் இடுக்கல்களில்
சிக்கி நிற்கும்
சிறு சோறே
யுக பசியை போக்கும்
சொர்க்க அமிர்தம்

புறப்பயத்தால்
என் அகத்தில் அடங்கும்
உன் அடைக்கலத்திற்காகவே
நீட்டிக்கிறேன்
என் ஆயுளை

எழுதியவர் : K.நிலா (28-Sep-22, 9:00 pm)
சேர்த்தது : Kநிலா
பார்வை : 566

மேலே