385 ஊண் உடையின் மிச்சமெலாம் உதவுவோர் வீடடைவர் - கைம்மாறு கருதா உதவி 3

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்

ஏவல்செய் வோர்க்குக் கூலி
..யிடைத்துகி லுணவாம் யாமோர்
காவல னெனினுஞ் சோறு
..கலையன்றி யொன்றுங் காணோம்
ஆவலாய்ப் பொருளை யீட்டி
..அயலவர்க் காச்சு மந்தோம்
ஈவதை மேற்கொண் டேமேல்
..இணையில்வீ டடைவோ நெஞ்சே. 3

- கைம்மாறு கருதா உதவி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சே! இட்ட பணியைச் செய்யும் வேலையாட் களுக்குக் கூலி தருவது இடுப்பில் கட்ட உடையும், வயிற்றுக்கு உணவிற்காகவுமே ஆகும்.

உலகமெல்லாம் ஆளும் மன்னனே ஆனாலும் உண்ணச் சோறும் உடுக்க உடையுமின்றி மிகுதியாகப் பெறுவது ஒன்றும் இல்லை.

ஆசையோடு பணத்தைத் தேடிப் பிறர் பொருட்டுச் சுமக்கின்றோம். அப்பணத்தைத் தேவையான பிறர்க்குக் கொடுத்து உதவி செய்து வருவோ மானால் ஒப்பில்லாத பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவோம்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

ஏவல் - இட்டபணி. இடை - இடுப்பு. கலை - உடை. ஆவல் - அளவிலா ஆசை. அயலவர் - பிறர்.
இணை - ஒப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Nov-22, 10:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே