பித்தம் நீக்கும் பொருட்கள் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
கொம்மட்டி வாழைப் பன்னங்
..கொளுத்திய கரியி னோடே
விம்மிய தண்ணீர் விட்டான்
..வேரெனுங் கிழங்கு சாந்தஞ்
செம்மைசேர் நெல்லி முள்ளி
..சேருமிம் மருந்தெல் லாமே
கம்மிய பித்தத் திற்குக்
..காலனென் றோது வாரே 1
- பதார்த்த குண சிந்தாமணி
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
சம்புநா வல்பீத் தாருச்
..சருமமும் முத்தாக் காசுஞ்
செம்பருத் தியுஞ்செ ழித்த
..தெங்கிளம் பூவும் கன்னல்
அம்புயத் தாதி னோடே
..அதினுறு வளையம் நெய்தல்
வெம்பிய சீலைச் சாம்பல்
..வெள்ளைப்பூ சிணிக்கா யென்னே! 2
- பதார்த்த குண சிந்தாமணி
பொருளுரை:
கொம்மட்டி, வாழைச்சருகு, சுட்டகரி, தண்ணீர்விட்டான் கிழங்கு, சந்தனம், நெல்லிமுள்ளி, சம்புநாவல், பெருமரப்பட்டை, கோரைக்கிழங்கு, செம்பருத்தி, தென்னம்பூ, கருப்புத் தாமரை, காந்தம், செங்கு வளை, கேசரம், துணிசுட்ட சாம்பல், கல்யாணபூசனிக்காய் இவை பித்தத்தை நீக்கும் .