கடைசியாய் உணர்வாய்
மதுவை மாதாவாய் மதிக்கிறார் இளையோர்
இதனால் இதனையே இனிமையாய் அரசும்
பதமாய் பலவகை பானமாய் விற்றிட
விதவித கடைகளை வீதி தோறுமே
நினைக்கும் இடத்தில் நினைத்த வகையில்
தினமும் பணத்தை திருடும் திருடராய்
அனைத்து இடத்திலும் கொட்டகை கடைகள்
வினைகளை விதைத்த அரசால் பாவமே
அரசின் ஊழியர் கூலிக்கு மூலமாம்
அரசையே இயக்கும் பெரிய வண்டியாம்
தரிசாய் பலரது வாழ்க்கை மாறினும்
பரிசாய் பார்க்கும் அரசால் துயரமே
மறப்போம் மதுவை மதியால் தினமும்
இறப்பின் காரணம் இதுவாய் இருக்க
அறத்தின் வாழ்வை அமைப்போம் அனைவரும்
பிறப்பின் முழுமை அடையவே துறப்போம்
மடையராய் இருந்தால் பிள்ளைகள் திருடராய்
கடைகளை நாடினால் குடும்பம் அழிவில்
உடையது இழந்தால் மதிப்பது போகுமே
கடைசியாய் உணர்வாய் தலைமுறை அழிவை.
--- நன்னாடன்