123 துணைவனுடன் வாழ்வதே சொல்லொணாப் பேரின்பம் - கணவன் மனைவியர் இயல்பு 15
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடங்களில் விளம் வரலாம்)
முதல்வியிவள் துணைவனே தெய்வமென்றாள் அவன்சிற்றில்
..மோக்க மென்றாள்
அதிலவனோ(டு) உறைதல்சா லோகசா மீபமென்றாள்
..அவன்கை தீண்டி,
மதமொடுமே யடித்தல்சா ரூபசாயுச் சியமென்றாள்
..மயற்பேய் கொண்டாள்
பதவியெலாம் ஈன்றோர்பால் இருக்கநண்ப னொடுமெலிந்தாள்
..பசிநோ யுற்றே. 15
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
எல்லா நலங்களும் பெற்றோர் வீட்டில் இருக்க, துணைவனுடன் கூடி வாழும்பொழுது மெலிவும் பசியும் எய்திய தலைவியானவள் தன் துணைவனே தெய்வம்; அவன் வாழும் சிறு வீடே பேரின்பப் பெருவீடாகிய மோட்சம்.
அவ்வீட்டில் அவனுடன் இணைந்து ஒன்றாக வாழ்வதே கடவுளுடன் ஓரிடத்தில் அணுகியிருக்கும் நிலை. அவன் கையைப் பற்றி மகிழ்ச்சியோடு இன்புறுவதே இணக்கமான ஐக்கியமாகும் நிலை என்று மயங்கும் நற்கொள்கை உடையவள் ஆனாள்.
மதம் - மகிழ்வு. அடித்தல் - இன்புறுதல், விளையாடல். மயல் – மயக்கம்
சாலோகம் . நான்கு பதவிகளுள் கடவுளுடன் ஓரிடத்தில் வசிக்கும் இடம், The blissful condition of being in God's world, one of four Pathavi
சாமீபம் - நான்கு பதவிகளுள் கடவுளை அணுகியிருக்கும் நிலை, The state of being near to God, one of four பதவி
சாரூபம் - இணக்கம்
சாயுச்சியம் - பதவி நான்கனுள் சீவ ஆன்மா பரம ஆன்மாவுடன் ஐக்கியமாகும் நிலை, Condition which the soul becomes absorbed in god head, the highest state of bliss, one of four pathavi