ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலை 1
ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலைத் தொகுப்பை இயற்றியவர் எங்கள் ஊரைச் சேர்ந்த ச.சோமசுந்தரம் என்ற சனகை.கவிக்குஞ்சரம் ஆவார்.
ச.சோமசுந்தரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோழவந்தான் என்ற ஊரில் தெற்கு ரத வீதியில் வாழ்ந்து வந்த சண்முகம் பிள்ளை – தெய்வானை அம்மையாருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவர் தன் ஐந்தாம் வயதில் தெற்கு ரத வீதியின் மேற்குப் பகுதியில் அமைந்த சிதம்பர விநாயகர் கோயிலின் திண்ணைப் பள்ளியில் ஆசிரியர் அழகர்சாமி தேசிகரிடம் ஆரம்பக் கல்வி கற்றார்.
தன் 12 ஆம் வ்யதில் இவர் தன் மாமனாகிய பெரும்புலவர், இலக்கணக் கடல் அரசஞ் சண்முகனாரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தன் 14 வயதிலேயே பாடல்கள் இயற்றும் திறமை வாய்க்கப் பெற்றார். இவரது பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த அரசஞ் சண்முகனாரும், மற்ற புலவர்களும் இவருக்கு ‘கவிக்குஞ்சரம்’ என்று பட்டம் ஈந்தனர். இவர் பின்னாளில் கவிக்குஞ்சரம் பிள்ளை என்றழைக்கப் பட்டார்.
இவர் சந்தப் பாடல்கள், கும்மிப் பாட்டு, காவடிச்சிந்து, வழிநடைச்சிந்து, தோத்திரப் பாமாலைகள், வண்ணப் பாடல்கள், கீர்த்தனங்கள், கண்ணிகள் இயற்றுவதிலும் இணையற்று வழங்கினார். தன் 20 வயதுக்கு மேல் நாடகக் குழுக்களுக்கு இவர் பெயரை ’முத்திரை’யாக வைத்து தக்க பாடல்கள் புனைந்து தருவதைத் தொழிலாகக் கொண்டார்.
சோழவந்தான் அருள்மிகு மாரியம்மன் திருவிழாவில் தேரோட்டத்தின் போது நடைபெற்று வந்த ‘செடில் குத்துதல்’ நிகழ்ச்சி பற்றி ‘ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் செடிற் சந்த ஒயில் கும்மி’ என்ற நூலினைப் படைத்திருக்கிறார்.
இவர் தன் வாழ்நாளிலேயே சீரடி சாய்பாபா அவர்களின் மகிமையை அறிந்து அவரைப் பற்றி பக்திப் பாடல்களை காப்புச் செய்யுள் நீங்கலாக 28 வெண்பாக்களில் எழுதியிருக்கிறார்.
என் தகப்பனார் கைப்பிரதியாக இருந்த இந்த ‘ஸ்ரீ சாய்பாபா தமிழ் மாலை’யை என் இளைய தம்பி V.K..வெங்கடசுப்ரமணியனின் மாமனார் சின்னாளபட்டியிலிருக்கும் திரு.T.S. இரத்னம் முதலியார் அவர்கள் மூலம் அதே ஊரிலிருக்கும் புலவர் திரு. துரை. தில்லான் உதவியுடன் பதிப்பித்தார்கள்.
'ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலை' யிலிருந்து காப்புச் செய்யுளும், முதல் 4 பாடல்களும் தருகிறேன்.
காப்பு
நேரிசை வெண்பா
உலகத்தார் உள்ளத் தொளிர்சாயி பாபா
இலகுதமிழ் மாலை இசைக்கப் – பலவிதத்தும்
நம்பிக்கை யூட்டி நலனருளும் தன்கருணைத்
தும்பிக்கைத் தேவன் துணை.
நூல்
நம்பிக்கை தருபவரே
நேரிசை வெண்பா
அன்பே வடிவாய் அமைந்த பெருமானே
என்பால் கருணை இனிதிருக்க – உன்பாதம்
நாயேன் மிகநம்பி நாடுகின்றேன் சீரடிவாழ்
சாயிபா பாவே சரண். 1
தாயன்பு கொண்டவரே
நேரிசை வெண்பா
ஆணெனவும் பெண்ணெனவும் ஆனமக்கள் தங்களுக்கு
நானிருக் கப்பயமென் நாட்டினிலே – தானென்று
தாயன்பு கொண்டு சகலரையும் காத்துவரும்
சாயிபா பாவே சரண். 2
அறிவிலாரிடத்தும் அன்பு கொண்டவரே
நேரிசை வெண்பா
இச்சகம் சொல்வார் இடத்தில் அணுகாமல்
நிச்சலுமுன் நாமம் நினைக்கவரும் – மெச்சுகலை
ஆயுமறி வில்லார்க்கும் அன்பால் அருள்சுரக்கும்
சாயிபா பாவே சரண். 3
அருள் குணம் தருபவரே
நேரிசை வெண்பா
ஈரம் படிந்தநெஞ்சும் ஏற்பவர்க்கீ யுங்கரமும்
ஓரம் படியா ஒருநாவும் – சேரலிங்கு
நீயன்பு வைத்தருளல் நேரன்றோ சீரடிவாழ்
சாயிபா பாவே சரண். 4
- புலவர் சனகை.கவிக்குஞ்சரம், சோழவந்தான்
(தொடரும்)