பார்வை விடு தூது

தன்முனைப்பிற்குள் விதைக்கப்பட்ட உணர்விலி
அவள் என்கிறாள்

என்று புன்னகைத்தாய்?
எப்போது விழியசைத்தாய் ?
உன் கன்னமேற்கோட்டின் கள்ளச் சுளிவுகளை,
சுருங்காத இரகசியத்தை,
எதனிடமிருந்து ஆக்கப் பெற்றாய்?
உன்மேலிருக்கும்
மரியாதை விலக்கிய என் பிடித்தமெல்லாம்
எதன்வழி தூதனுப்புவது ?

இதரப்பேருடைய வார்த்தைகளிலோ
கருத்துகளிலோ
அடைத்துவிடமுடியாதவளை
இரசிக்க மட்டும் அனுமதிப்பாயா என்ன ?

அழகை தரிசிக்கிறவர்கள்
அதனிடம் சென்று உரையாடிக் கொண்டா
இருப்பார்கள் ம் ?

உனக்கும் சற்று மறைவில் நின்றுவிட்டு
பூரித்து உணர்ந்த இந்த நிறைவை
சொல்லித் தொலைத்துவிடும் விருப்பமில்லை
இது எனக்கான நிறைவு
வேறு யாருக்கு இதன்மேல் அக்கறை இருந்துவிடப் போகிறது ?

முகப்பரப்பில்
மஞ்சளிடாதவளைப்பார்த்து
கவிஞனொருவன்
அழகி என வர்ணித்தபோது
அவள் தனித்திருந்த தருணமெல்லாம்
மனக்கிடங்கின் அறைகள்
நிறம் சேர்த்தன.
கிள்ளிச் சிவந்த
குழந்தை கன்னம் போல்
ஒருமையில் கூப்பிட்டவனிடமிருந்து
ஒளிய கால்கள் வராமல்
நின்ற இடத்திலேயே
தாளமிட்ட நாணங்களின்மேல்
கீறி மின்னலிட்டது ஒரு முதல் புன்னகை.
இதுநாள்வரை
இத்தனை அழகையும்
எங்கே பொதியேற்றம் செய்திருந்தாய் ம் ?
புருவ அசைவிலோ
கன்னக் கதுப்பிலோ
வியர்த்தலின்போது காணும்
நுதல் பிசைதலிலோ
அசதிப் பெருமூச்சிலோ
அத்தனை அழகாய்
ஒருவரிடம் கூட
தென்படாமலா மறைந்திருந்தாய் ?
உன்னைப் பின்தொடரும்
கூட்டத்தின்
அதிருப்த்தியை நுகர்ந்துவிடும் பேராவல்
எனக்குள் ஏன் உருவாக்கினாய் ம் ?
சஞ்சலமூட்டும் அழகை
தனிமையின் இதமுணரும் மோகனவேளையில்
மென்தென்றல் பாரித்த
ஆலிலையொன்றின் ஊசிமுனைபோல் நுழவி
ஏன் இம்சிக்கிறாய் ?

மேனகையின்
ஒருப்பார்வைக்கட்டு அம்பினால்
சபிக்கப்பட்ட ரிஷ்ய ஷிருங்கன்போல்
உன்னால் ஆகிவிட்டேன்.
விமோசனம் வேண்டாமா ம்
இனி என்ன செய்வது ?
சிறுநேரம் ஒளிசிந்தும் மின்மினிபோல் அழகாய் மிளிர்ந்துவிட்டுபின்
ஆயுள் முடிய விரும்புகிறேன்
விட்டிலாய் ஆபத்தைச்சுற்றிவிட்டு அன்றிரவு மட்டும்
வாழ்ந்தாலே போதும் என்றிருப்பேன்
விடியலில் வேறொரு பிறவி எடுத்து வருவேன்
நிறங்கள் உதிர்க்கும் ஒரு வண்ணத்துப்பூச்சியாகவோ
இளந்தளிர்கள் கால் படரும்
ஒரு பரந்த புல்வெளியாகவோ
அடுத்தநொடியின் யாரோவுடைய அலும்புதலிற்காகவே
கிளையில் தொடர்புவிட காத்திருக்கும்
உதிரா மலர்களாகவோ வருவேன்

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (30-Jan-23, 12:36 am)
Tanglish : parvai vidu thootu
பார்வை : 132

மேலே