மெல்லத் தமிழினி
அற்றைத் திங்கள் பொதிகையில்
உதித்த தெங்கள் தமிழென்பேன்!
ஒற்றைக் காலில் நிற்பதனால்
பிடிவாதக் குணமோ அதிகமென்பேன்!
மூன்று கொம்புகள் முளைத்ததனால்
அடக்க முடியா தென்றிடுவேன்!
மூண்டு வருகிற பகையினையே
முட்டிச் சாய்க்கும் என்றிடுவேன்!
ஆய்தம் ஒன்று ஏந்திநிற்கும்
மாய அணங்கு என்றுரைப்பேன்!
நோய்கள் கூடி வந்தாலும்
மாத்திரை கைவசம் உண்டென்பேன்!
அகரம் முதலாய்க் கொண்டதுதான்
சிகரம் ஏறி நிற்குமென்பேன்!
நகரம் கிராமம் எங்கேயும்
"ழகரம்" சிறப்பைக் கூட்டுமென்பேன்!
ஏகம்ப நாதனை ஈர்த்ததனால்
இகம்பர மெங்கும் சேருமென்பேன்!
முகநூல் புலனம் தானமர்ந்து
அகம்புற மிரண்டும் பேசுமென்பேன்!
திணிக்கும் மொழியை விரும்பாமல்
இனிக்கும் தமிழைப் படித்துவந்து
மணக்கும் திருவாய் மெல்லத்
தமிழினி தினிதாய் வாழுமென்பேன்!