பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ - பழமொழி நானூறு 293

நேரிசை வெண்பா
(’ம்’ ‘ன்’ ‘ந்’ மெல்லின எதுகை)

தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கல்லார்
பின்னை ஒருவரால் செய்வித்தும் - என்றிருத்தல்
சென்னீர் அருவி மலைநாட! பாய்பவோ
வெந்நீரும் ஆடாதார் தீ. 293

- பழமொழி நானூறு

பொருளுரை:

பரந்து செல்கின்ற அருவியை உடைய மலைநாடனே! தம்மால் முடிக்கலான தொரு செயலை தாம்செய்து முடிக்கமாட்டாதவராய் பிறகு வேறொருவரால் செய்வித்துக் கொள்வோம் என்று சோம்பியிருத்தல் வெந்நீரினும் குளியாதார் தீயின்கண் பாய்வார்களோ? இல்லை; அதுபோல அதுவுமில்லையாம்.

கருத்து:

தம்மால் முடியும் செயலைத் தாமே செய்தல் வேண்டும்.

விளக்கம்:

சுடுநீரிலும் குளியாதார் தீயிற் பாய்தல் இலர். அதுபோல, தன்னாலே முடிவனவற்றைச் செய்யாதார் பிறராலே முடித்துக் கொள்ளுதல் இலர். தன்னால் இக்காரியம் முடியும் என்பது அறியப்பட்டதாகலின், அதனை உடனே செய்தல் வேண்டும். இங்ஙனம் செய்யாது பிறரை நம்பின், அவரால் அக்காரியம் முடியுமா முடியாதா என்று ஆராயப் படவேண்டுதலின் செயல் முடியாதென்பதாம்.

'பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-23, 6:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே