590 சீலத்தார் சிவனடியைச் சென்றுசேர்ந்து இன்புறுவர் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 48
தரவு கொச்சகக் கலிப்பா
தீயர்தமைச் சுடுந்தழலைச் சீலர்தமக் கொருநிழலை
ஆயரிய பரம்பொருளை யாவலினேத் தாய்மனமே
ஆவலினீ யேத்துவையேல் அல்லற் கரையேறி
மேவரும்பே ரானந்த வெள்ளமதில் தோய்வாயே. 48
- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
நீத்தார் நிகழ்த்தும் அறநூல்வழி ஒழுகாத அன்பில் கொடியரை `என்பிலதனை வெயில் காயுமாறு சுடும் அறக்கடவுளை நூல்வழி யொழுகும் மாலகன்ற சீலர்க்கு ஆல்போல் இன்பருளும் அருள்நிழலை, ஆராய்தற்கரிய `மாற்ற மனங்கழிய நின்ற மறையோனாகிய பெரும்பொருளை நீங்காக் காதலுடன் நெஞ்சே ஏத்துவாயாக.
அங்ஙனம் ஏத்தினால் பிறவிப் பெருங்கடலாகிய பெருந்துன்பக் கரையேறி, அன்பரல்லார்க்குப் பொருந்துதற்கு அரிய பெரும் பேரின்பமாகிய பேரா ஒழியாப் பிரிவில்லா, மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலுள் மூழ்கி என்றும் இன்புற்றிருப்பாய்.
சீலர் - நல்லொழுக்கமுடைய சான்றோர், ஆயரிய - ஆராய்தற்கரிய. ஆவல் - நீங்காக் காதல்.
அல்லல் - பிறவித்துன்பம். மேவரும் - பொருந்துதற்கரிய. பேரானந்தம் - பேரின்பம். வெள்ளம் - கடல்.