கள்உண் மாந்தரின் கைப்பன தேடியே ஒட்டகம் சென்ற பான்மை - கலிவிருத்தம்
ஒட்டகம் சென்ற பான்மை!
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து; நிரையில் தொடங்கினால் 12 எழுத்து எண்ணிக்கை தானே வரும்! 2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு;
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
(1, 3 சீர்களில் மோனை)
தள்ள ரும்பரம் தாங்கிய ஒட்டகம்
தெள்ளு தேம்குழை யாவையும் தின்கில
உள்ளம் என்னத்தம் வாயும் உலர்ந்தன
கள்உண் மாந்தரின் கைப்பன தேடியே! 37
- எழுச்சிப் படலம், பால காண்டம், கம்பராமாயணம்
பொருளுரை:
இறக்கி வைக்க முடியாத பெரிய சுமையைச் சுமந்து சென்ற ஒட்டகம் தெளிந்த இனிய தளிர்கள் எவற்றையும் தின்னாமல் கசக்கும் வேப்பந் தழை முதலியவற்றைத் தேடி, கள்ளைக் குடிக்கும் மக்களைப் போலத் தம் நெஞ்சு உலர்ந்தது போலத் தம் வாயும் உலர்ந்தது.
கட்குடியர் பால் முதலிய இனிய சுவையான பொருள்கள் பல இருப்பினும், அவற்றை விரும்பாது கள்ளைத் தேடி அலைவது போல,
இன்சுவைத் தளிர் பல இருப்பினும் அவற்றை விரும்பாது ஒட்டகம் வேப்பந் தழையையே நாடி அலைந்து வாயும் நெஞ்சும் உலர்ந்தது.