புயல் நாள் வண்ணம் 1
புயல் நாளொன்றின்
வண்ணம் இன்னும் மனதில் தேங்கி நிற்கின்றது.
கிராமத்தில் என் பெரிய தாயாரின் இல்லம். மின்சார இணைப்பில்லா சிம்னி விளக்கு மங்கல் ஒளிக்காலம் அது.
மகிழ்வுக்கு மட்டும் குறைவிருந்ததேயில்லை!
சிறுவயதின் காலமெல்லாம் எனக்கு கதைக் காலங்கள். அக்கதையின்மனச் சித்திரத்தை நான் வரைந்து கொண்டேயிருக்கிறேன் இந்நாளிலும்!
எண்ண எண்ணக் குறைவிலா இன்பம் தரும் நாட்கள் அவை.
நான் அதிகம் பேசாதவள். அக்கா (பெரிய தாயின் மகள்) எனக்கு நேரெதிர் கதைக்காமல் ஒரு நிமிடம் கூட அவளால் இருக்க முடியாது. அதானாலேயோ என்னவோ எப்போதுமே அவளை வியக்கும் என் கண்களும் மனதும்.
பால்ய பருவத்தில் அதிகம் நான் செலவிட்ட காலங்களில் பெரும் பங்கை எடுத்துக் கொள்வது என் பெரிய தாயின் பழைய வீடு. அவர்களின் புதுமனை என் கண்களுக்கு கடல்போல் பரந்தாக பின்நாளில் கனவைத் தந்த போதும், எனக்கு என்னவோ அந்தப் பழைய வீட்டில் தீரா மோகமிருந்தது. அவர்கள் வீட்டிற்கு தெருவிலிருந்து ஒழுங்கை வழி பயணிக்கும் போதே சோலை ஒன்றினூடான பயணப் பரவசம் என்னுள். பலவகை மரங்களும் பூக்களும் உரசும் வாசனையும் மரங்களின் கீழமைந்த வீடுகளின் அமைதியைப் பிரதிபலிக்கும் சோபையும் எனக்கு அவ்வளவு இஷ்டம்.
ஒவ்வொரு தடவை தனியே அவ்வழி நான் நடக்கும் போதும் புத்தம் புது உணர்வுக் கோர்வை கிளர்ந்தெழும் என்னுள்!
மண்ணாலான வீதி.
மண் என்று சொல்வதை விட மணல் என்று சொல்வது மிகப் பொருத்தம். கால் புதைய அதனுள் நடப்பது போன்றொரு உணர்வு. வழிவழியே பெர்ரி மரங்கள் கொய்யாமரங்கள், கொவ்வை மரங்கள்,எருக்கம் செடி அவற்றின் இலை உரசலில் உண்டகும் சுகந்தம் கிளர்வைத் தரும். பிடித்த பயணமெல்லாம் இந்திரலோகப் பிரவேசம் தான் என்க்கு அதிலும் நான் தனித்து அவ்வழி போகும் போது என் புலன்களை முற்று முழுதாக அவைக்கு நான் அர்ப்பணித்து விடுபவளாக இருக்கிறேன். எனக்குள் நான் அவைகளுடன் உரையாடிக் கொள்கிறேன். அதனாலேயோ என்னவோ தனிமையை நான் பெரிதும் விரும்புகிறேன் பயணங்களில் கூட…
தொடரும்….
நர்த்தனி