விளையாகியத் தலைகள்

விலையாகிய தலைகள்
**************************
இனவாதமு மதவாதமு மிணைந்தேயுள தேசம்
இனிதாகிடு மெனவேசில இழிவானவர் பேசும்.
மனவேதனை தரவேயெனு மநியாயம தாகும்
மதுபோதையி லுளர்வாரிவ மறியாடுக ளாகும்
சனமோடெழு கிறபேதமை சனநாயகம் வாழச்
சதியாயர சியல்வாழ்ந்திட சரியாகிட லாகும்
எனவேயெணு முளமோடவை இருப்பாரவ ராளும்
இருளாட்சிலி ளொளியானது இருந்தாவிடு மிங்கே?
*
மடிமீதினில் கொடுந்தீயினை மகிழ்வோடெழ விட்டு
மடிவாயென கவிபாடிடு மனத்தோடிருப் போரின்
பிடிவாதமு முடும்போடுள பிடிமானமு மொன்றிப்
பிரிவேவரல் முறையேயெனப் பிடித்தாட்டிடும் பேயாய்
அடிமாடுக ளெனவேநமை அறுத்தேபலி தீர்க்கும்
அதிகாரமும் சதிகாரரும் அழகாயெமை வெட்டுக்
குடிபோதையி லிடவேயொரு குறிக்கோளுடன் நின்று
குழிதோன்றிடும் கொடுங்கோலினில் குடிவாழுவ தாமோ?
*
அடிமேலொரு அடிவாங்குத லழகாமெனக் கொள்ளும்
அவதாரிக ளுருவாகிட அதிகாரமு மேந்தும்
இடிமேலொரு இடியேவிழு மெதிர்பார்ப்புக ளோடு
இதிகாசமு மெமதேயெனு மிறுமாப்பொடு துள்ளும்
கடிவாளமு மறுந்தேவிட கடுவேகமுஞ் சென்று
கடுவேதனை தருமேபரி அதுபோலவே நின்று
விடிவோவுமக் கிலையேயென
வெறுப்பேவர விட்டு
விடுமேபல விலையாகிய தலையாமது வென்றும்
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Apr-23, 4:15 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 45

மேலே