பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம்

மம்மி, டாடி என்ற சொற்களை இன்றே களைவோம்
பைந்தமிழ் என்பது பசுமையான தமிழ்,
பிற மொழிக் கலப்பின்றிப் பயின்று வரும் தமிழ்,
ஆங்கில மொழிக் கலப்பின்றி உள்ள அழகு தமிழ்,
வடமொழிக் கலப்பின்றி பரிதிமாற்கலைஞர் போற்றும் தமிழ்!

பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத் தேவர்
உருவாக்கிய மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள்
தமிழ்த் தாத்தா, அரசஞ் சண்முகனார் முதலாய
புலவர்கள் காத்த தமிழ் - பைந்தமிழ்!

'பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்
பாத மலர் பணிந்து பாடவும் வேண்டும்' என்ற
பாபநாசம் சிவன் பாடலுக்கு உயிர் தந்த
பாகவதர் கனவு நனவாக வேண்டும்.

பைந்தமிழ் வளர்த்த பாவலர் செய்குத் தம்பி,
'செந்தமிழ் எனும் போதினிலே இன்பத் தேன்
பாயுது காதினிலே' பாடிய பாரதி கனவு நனவாக
நம் தமிழைப் பாடமொழியாக்க வேண்டும்.

பைந்தமிழில் பார்த்தீனியமாய், விடமாய் நுழைந்துள்ள
பிறமொழிச் சொற்களை நாம் களைவோம்,
மம்மி, டாடி என்ற சொற்களை இன்றே களைவோம்,
அம்மா, அப்பா என்று மனம் மகிழ அழைப்போம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-23, 7:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 82

மேலே